சென்னை:  கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில், தேர்வு செய்யப்படாத பயனர்கள்  மேல்முறையீடு செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியது. அதன்படி, தவறுகளை திருத்தி மேல்முறையீடு  செய்தவர்களில், தேர்வு செய்யப்பட்ட  தகுதியானோருக்கு வரும் 25ந்தேதி முதல் குறுஞ்செய்தி அனுப்பப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது.

தமிழ்நாடு அரசு குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை அண்ணா பிறந்தநாளான கடந்த செப்டம்பர் மாதம் 15ம் தேதி  தொடங்கியது. அதைத் தொடர்ந்து இந்த திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஒவ்வொரு மாதமும், 14 மற்றும்  15 தேதிகளில் பயனாளிகளுக்கு பணம் அனுப்பப்பட்டு வருகிறது. “இதுவரை 1 கோடியே 6 லட்சத்து 58 ஆயிரம் மகளிருக்கு இந்த உரிமைத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் பல லட்சம் விண்ணப்பதாரர்கள் பல்வேறு காரணங்களால் இந்த திட்டத்துக்கு தகுதி பெறாமல்  இருந்தவர்கள் மீண்டும் முறையீடு செய்யலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதன்படி, அதற்கான கடைசி நாளான அக்டோபர் மாதம் 25ந்தி  வரை 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.

இந்த நிலையில் மகளிர் உரிமை திட்டத்தில் தகுதியானவர்களுக்கு நவ.25ம் தேதி முதல் குறுஞ்செய்திகள் அனுப்பப்படும் என தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது.  மேல்முறையீடு செய்துள்ளவர்களின் விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பணி நடைபெற்று வருகிறது. தகுதியான அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை கிடைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  ஏற்கனவே திட்டத்திலுள்ள பயனாளிகளுக்கு தீபாவளிக்கு முன்னதாக ரூ.1,000 செலுத்தப்பட வாய்ப்பு உள்ளது.