பாரீஸ்:

அமெரிக்க அதிபரின் மனைவி வெள்ளை மாளிகையில் சிறை வைக்கப்பட்டுள்ளார் என்று பிரான்ஸ் அதிபர் மனைவி தெரிவித்துள்ளார்.

உலகையே ஆட்டிபடைக்கும் அமெரிக்காவின் அதிபருக்கு வானலாவிய அதிகாரங்கள் இருக்கிறது. அவரும் அவரது குடும்பத்தாரும் ராஜ வாழ்க்கை வாழுகின்றர் என்று தான் நம்மில் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அது உண்மையல்ல. வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்பின் மனைவி சிறை வாழ்க்கை வாழும் தகவல் தற்போது அம்பலமாகியுள்ளது.

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரான் தனது மனைவி பிரைஜித்யே மெக்ரான் ஆகியோர் 3 நாள் பயணமாக அமெரிக்கா சென்று திரும்பியுள்ளனர். அங்கு அதிபர் டிரம்ப், அவரது மனைவி மெலனியா ஆகியோரை வெள்ளை மாளிகையில் சந்தித்து பேசினர். பின்னர் பிரான்ஸ் திரும்பினர். இந்நிலையில் பிரைஜித்யே மக்ரான் ஒரு நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அப்போது அவர் கூறுகையில்,‘‘ வெள்ளை மாளிகையில் மெலனியா கிட்டத்தட்ட ஒரு கைதியை போல் இருக்கிறார். இது வருத்தமாக உள்ளது. எனினும் என்னால் எதுவுமே செய்ய முடியவில்லை. மெலனியாவால் வெள்ளை மாளிகையில் ஒரு ஜன்னலை கூட திறக்க முடியவில்லை. அவரால் வெளியில் தலைகாட்ட முடியவில்லை. ஆனால், நான் தினமும் பாரீஸ் நகரில் சுற்றி வருகிறேன். அவர் கடுமையான சூழலில் உள்ளார். ஒவ்வொன்றுக்கும் விளக்கம் அளிக்க வேண்டிய நிலை உள்ளது.

ஒரு பெண்ணாக அவருக்கு நிறைய திறன் உள்ளது. ஆனால் அவற்றை மறைக்க முயற்சி செய்கிறார். அனைத்து விஷயங்களையும் பார்த்து அவர் எளிதாக சிரிக்கிறார். ஆனால் நான் வெளிப்படுத்துவதை விட அவர் குறைவாக தான் வெளிப்படுத்துகிறார். சாதாரண வாழ்க்கை வாழ விரும்பும் அவரால் வெளியில் செல்ல முடியவில்லை. ஒரு திருமண நிகழ்ச்சியல் தான் தனது பிள்ளைகளையும், பேரக் குழந்தைகளையும் சந்தித்துள்ளார். அங்கு அனைத்துமே திட்டமிடப்பட்டு வகுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

65 வயதாகும் மெக்ரானை விட அவரது மனைவி 25 வயது குறைவாகும். அதேபோல் 71 வயதாகும் டிரம்பின் மனைவிக்கு 48 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.