சென்னை: மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை எதிர்த்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது.
சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காலை 11 மணி அளவில் சட்டப்பேரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள அதிமுக, காங்கிரஸ் உள்பட சட்டப்பேரவையில் இடம்பெற்றுள்ள 13 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இந்த சட்டப் பேரவைக் கூட்டத்தில் மேகதாது அணை விவகாரத்தில், முக்கியமான முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கடந்தவாரம் டெல்லி சென்று, மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து, காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.