மாநில அரசின் அனுமதி இல்லாமல் புலனாய்வு நடவடிக்கை எடுக்க சி.பி.ஐ.க்கு வழங்கப் பட்ட சிறப்பு அதிகாரத்தை மேகாலயா அரசு ரத்து செய்துள்ளது.
எதிர்க்கட்சிகளை மிரட்டவும் அரசியல் நோக்கத்திற்காகவும் சி.பி.ஐ. எனும் ஆயுதத்தை மத்திய அரசு கையில் எடுப்பதாக மத்திய அரசு மீது குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில் மேகாலயா மாநில அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
2015 ம் ஆண்டு மிசோரம் மாநிலத்தில் லால் தன்ஹவ்லா தலைமையிலான காங்கிரஸ் அரசு முதன் முதலாக சி.பி.ஐ.க்கு எதிராக இந்த நடவடிக்கையை எடுத்தது.
இதனைத் தொடர்ந்து மகாராஷ்டிரா, பஞ்சாப், ராஜஸ்தான், மேற்கு வங்கம், ஜார்கண்ட், சத்தீஸ்கர், கேரளா ஆகிய மாநிலங்கள் சிறப்பு அதிகாரத்தை ரத்து செய்து தங்கள் மாநிலத்தில் சி.பி.ஐ. நடவடிக்கையை கட்டுப்படுத்தியது.
தற்போது ஒன்பதாவது மாநிலமாக இந்த நடவடிக்கையை எடுத்திருக்கும் மேகாலயா மற்ற மாநிலங்களைப் போல் எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள் இல்லை என்பதும், மேகாலயாவை ஆளும் கான்ராட் சங்மா தலைமையிலான தேசிய மக்கள் கட்சி மத்தியில் ஆளும் பா.ஜ.க. கூட்டணியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேகாலயா உள்துறை அமைச்சரும் முதல்வர் கான்ராட் சங்மா-வின் சகோதரருமான ஜேம்ஸ் சங்மா மீது சட்டவிரோத சுரங்கம் மற்றும் குவாரி மூலம் நிலக்கரி தோண்டியதாக குற்றச்சாட்டு உள்ளது.
சௌபாக்யா திட்டத்தை அமல்படுத்தியதில் ஜேம்ஸ் சங்மா மிகப் பெரும் ஊழலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது, இந்த ஊழல் குறித்து சிபிஐ விசாரணைக்கு காங்கிரஸ் கோரிக்கை வைத்துள்ள நிலையில் மேகாலயா அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.