மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி (வயது 30) – சோனம் (வயது 25) ஆகிய இருவருக்கும் மே 11ம் தேதி திருமணம் நடைபெற்ற நிலையில் மே மாதம் 20ம் தேதி இந்த இளம்ஜோடி தேனிலவுக்குச் சென்றது.

அசாம் மாநிலத்தில் உள்ள காமாக்யா கோயிலுக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டுச் சென்ற இவர்கள் பின்னர் அங்கிருந்து திடீரென மேகாலயா மாநிலம் ஷில்லாங் சென்றுள்ளனர்.

இந்த நிலையில் அவர்கள் இருவரையும் மே 23க்குப் பிறகு தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டதை அடுத்து அவர்கள் காணாமல் போனதாக மே 27ம் தேதி ம.பி. காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.

மத்திய பிரதேச காவல்துறையில் அளிக்கப்பட புகாரை அடுத்து மேகாலயா காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் அவர்கள் தேடுதல் நடவடிக்கையில் இறங்கினர்.

இந்த தேடுதல் நடவடிக்கையில் ஜூன் 2ம் தேதி சிரபுஞ்சி அருகே ஒரு நீர்வீழ்ச்சிக்கு அடியில் ராஜா ரகுவன்ஷியின் உடல் இருப்பதை டிரோன் உதவியுடன் கண்டுபிடித்தனர்.

ஆனால் சோனம் குறித்து எந்த தகவலும் தெரியவில்லை, இதையடுத்து பிரேத பரிசோதனைக்குப் பிறகு ராஜா ரகுவன்ஷியின் உடலை அவரது உறவினர்களிடம் காவல்துறையினர் ஒப்படைத்தனர்.

ஜூன் 5ம் தேதி ராஜா ரகுவன்ஷியின் உடல் அவரது சொந்த ஊரான இந்தூரில் அடக்கம் செய்யப்பட்டது. அதேவேளையில் காணாமல் போன சோனத்தை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில், மேகாலயா காவல்துறை நடத்திய விசாரணையில், சிரபுஞ்சி அருகே இந்த இளம்ஜோடிகளை மூன்று நபர்கள் பின்தொடர்ந்து சென்றது உறுதிசெய்யப்பட்டது.

மேலும், ராஜா ரகுவன்ஷியின் கழுத்தில் இருந்த வெட்டுக்காயமும் அவரது உடல் அருகில் வீசப்பட்டிருந்த கோடாரி போன்ற ஆயுதமும் இது கொலையாக இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தை காவல்துறையினருக்கு ஏற்படுத்தியது.

தவிர, அவர்கள் பயன்படுத்திய ஆயுதம் மேகாலயா மாநிலத்தில் அறியப்படாத ஒன்றாக இருந்தது.

இதையடுத்து வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இதில் ஈடுபட்டிருக்க வாய்ப்பிருப்பதாகச் சந்தேகித்த மேகாலயா காவல்துறை சோனம் மற்றும் ராஜா ரகுவன்ஷியின் மொபைல் தரவுகளை ஆய்வு செய்தது.

அதில், சோனத்திற்கு ராஜ் சிங் குஷ்வாஹா என்ற நபரின் எண்ணில் இருந்து பலமுறை அழைப்பு வந்ததை உறுதி செய்த காவல்துறையினர் ராஜ் சிங் குஷ்வாஹா குறித்த விசாரணையில் இறங்கினர்.

ஆனால், சோனம் குடும்பத்தினர் நடத்தி வரும் பிளைவுட் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ராஜ் சிங் குஷ்வாஹா இந்தூரில் இருப்பதும் அவர் ராஜா ரகுவன்ஷியின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டதும் உறுதிசெய்யப்பட்டது.

அதேவேளையில் ராஜ் சிங் குஷ்வாஹா வேறு பல நபர்களுடன் தொடர்பில் இருந்ததும் சோனம் இருப்பிடம் குறித்து அவர்களிடம் பேசியதும் அவரது மொபைல் தரவுகளை ஆய்வு செய்த காவல்துறையினருக்கு தெரியவந்தது.

இதையடுத்து மற்ற நபர்களை தேடும் பணியை காவல்துறையினர் தீவிரப்படுத்திய நிலையில் ஜூன் 8ம் தேதி ஆகாஷ் ராஜ்புத், ஆனந்த் குமார் ஆகிய இருவரையும் உ.பி. மாநிலத்தில் கைது செய்த போலீசார் விக்கி தாக்குர் என்ற நபரை ம.பி.யிலும் கைது செய்தனர்.

இவர்களிடம் நடத்திய விசாரணை மேற்கொண்ட அதேவேளையில் மே 9ம் தேதி நள்ளிரவு உ.பி. மாநிலம் காஜிபூரில் சோனம் இருப்பது தெரியவந்ததை அடுத்து அவரும் கைது செய்யப்பட்டார்.

இந்த விசாரணையைத் தொடர்ந்து சோனம் (25) மற்றும் ராஜ் சிங் குஷ்வாஹா (21) தவிர அவரது கூட்டாளிகள் ஆகாஷ் ராஜ்புத் (19), விக்கி தாக்குர் (22) மற்றும் ஆனந்த் குமார் (23) ஆகியோரை கைது செய்த மேகாலயா போலீசார் அடுத்தகட்ட விசாரணைக்காக அவர்களை ஷில்லாங் அழைத்துச் சென்றுள்ளனர்.

 

இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளதாகக் காவல்துறை தரப்பில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளது, அதில் :

சோனம் குடும்பத்தினர் நடத்தி வரும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த 21 வயதான ராஜ் சிங் குஷ்வாஹா மீது சோனம் காதல் வயப்பட்ட நிலையில் அவருக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்றதை அடுத்து ராஜா ரகுவன்ஷியை அவர் திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்குப் பிறகு காதலனுடன் சேர்ந்து வாழ்வதே இன்பம் என்று நினைத்த சோனம், ராஜ் சிங் குஷ்வாஹா உடன் தொடர்பு கொண்டு பேசிய நிலையில் ராஜ் சிங் குஷ்வாஹா தனது பாலிய நண்பர்களான ஆகாஷ், ஆனந்த், விக்கி ஆகியோரிடம் இதுகுறித்து ஆலோசித்துள்ளார்.

இதையடுத்து ராஜா ரகுவன்ஷியை கொலை செய்ய திட்டமிட்ட இவர்கள் தேனிலவு என்ற பெயரில் வெளியூருக்கு அழைத்துச் சென்று கொல்ல திட்டமிட்டுள்ளனர்.

அதற்காக வீட்டில் அசாம் செல்வதாகக் கூறிச் சென்ற இளம் தம்பதியினர் வீட்டில் இருந்து 9 லட்ச ரூபாய் பணம் மற்றும் நகைகளை எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

அசாம் சென்ற இவர்கள் அங்கிருந்து மேகாலயா மாநிலம் ஷில்லாங் சென்ற நிலையில் இந்தூரில் இருந்த ராஜ் சிங் குஷ்வாஹா-வை தொடர்பு கொண்டு தொடர்ந்து தனது இருப்பிடம் குறித்து சோனம் தகவலளித்துள்ளார்.

இவர்களை பின்தொடர்ந்து சென்ற ஆகாஷ், ஆனந்த், விக்கி ஆகியோருக்கு தனக்கு கிடைத்த தகவலை வழங்கி வந்த ராஜ் சிங் குஷ்வாஹா சமயம் பார்த்து ராஜா ரகுவன்ஷியை தீர்த்துக் கட்டுமாறு கூறியுள்ளார்.

அதற்காக அசாம் மாநிலம் கவுகாத்தியில் கோடாரி போன்ற ஆயுதத்தை வாங்கிய அவர்கள் சோனத்தை பின்தொடர்ந்து மேகாலயா சென்ற நிலையில் சிரபுஞ்சி அருகே ராஜா ரகுவன்ஷியை தாங்கள் வைத்திருந்த ஆயுதத்தால் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து ஆகாஷ், ஆனந்த், விக்கி ஆகிய மூவரும் சொந்த ஊருக்கு ரயில் ஏறிய நிலையில் சோனம் பஸ் பிடித்து வாரணாசி சென்றுள்ளார்.

பின்னர் வாரணாசியில் இருந்து காஜிபூர் வந்த அவரை காவல்துறையினர் கைது செய்த நிலையில் தனது பணம் மற்றும் நகைகளை ராஜா ரகுவன்ஷியை கொலை செய்தவர்களுக்கு கொடுத்ததாகக் கூறியதாக சொல்லப்படுகிறது.

இருந்தபோதும், மேகாலயா காவல்துறை இவர்களை ஷில்லாங் அழைத்துச் சென்றுள்ள நிலையில், அவர்கள் மேற்கொள்ளும் விசாரணையில் தான் இந்த கொலைக்கான முழு விவரம் தெரியவரும்.

‘முக்கோண காதல்’ மேகாலயா தேனிலவு படுகொலையைத் தீர்க்க முடியாமல் திணறும் மூன்று மாநில போலீசார்… சிபிஐ விசாரணைக்கு கோரிக்கை…