ஷில்லாங்
மேகாலயா முதல்வராக பதவி ஏற்றுள்ள கான்ராட் சங்மா தனது அமைச்சரவை சகாக்களுக்கு துறை ஒதுக்கீடு செய்துள்ளார்.
மேகாலயாவில் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள தேசிய மக்கள் கட்சித் தலைவர் கான்ராட் சங்மா முதல்வராக பதவி ஏற்றுள்ளார். இந்தக் கூட்டணியில் தேசிய மக்கள் கட்சி – 19, இணைந்த ஜனநாயகக் கட்சி – 6, மக்கள் ஜனநாயக அமைப்பு – 4, பாஜக – 2, மலைப்புற மக்கள் ஜனநாயகக் கட்சி -1 மற்றும் சுயேச்சை – 1 ஆகிய உறுப்பினர்கள் உள்ளனர்.
தன்னுடன் பதவி ஏற்ற அனைவருக்கும் முதல்வர் கன்ராட் சங்மா துறை ஒதுக்கீட்டை இன்று அறிவித்துள்ளார். முதல்வர் உள்துறை, அரசியல், நிதித்துறை, திட்டம், அமைச்சரவை விவகாரம், போன்றவைகளை தனக்கு வைத்துக் கொண்டுள்ளார்.
முன்னாள் காங்கிரஸ் உறுப்பினரும் தேர்தல் சமயத்தில் தேசிய மக்கள் கட்சிக்கு மாறியவருமான டின்சாங்குக்கு பொதுப்பணித்துறை, விலங்குகள் நலம், உள்துறை, தொழிலாளர் நலம் ஆகிய துறைகளை ஒதுக்கி உள்ளார்
முதல்வரின் சகோதரர் ஜேம்ஸ் சங்மாவுக்கு காவல்துறை, சிறைத்துறை, பாஸ்போர்ட், உணவு மற்றும் வினியோகம், மின்சாரம், மாவட்ட நிர்வாகம், சட்டம் ஆகிய துறைகள் வழங்கப்பட்டுள்ளது. கொமிங்கோன் யாம்போனுக்கு பொது நிர்வாகத் துறை மற்றும் கட்டுமானத்துறை வழங்கப்பட்டுள்ளது.
இது தவிர தோழமைக் கட்சியான இணைந்த மக்கள் ஜனநாயகக் கட்சியை சேர்ந்த மெட்பா லிங்க்டோ வுக்கு நீர்வளம், சுற்றுலா உள்ளிட்ட துறைகளும், லேக்மென் ரிம்பாய்க்கு வனத்துறை, கல்வித்துறை, எல்லை மேம்பாட்டுத் துறைகளும், குர்மென் ஷிலாவுக்கு வருமானம் மற்றும் பேரிடர் மேலாண்மை, சமூக நீதி ஆகிய துறைகளும் வழங்கப்பட்டுள்ளன.
மக்கள் ஜனநாயகக் கட்சியை சேர்ந்த பாண்டிடோர் லிங்டோவுக்கு விவசாயம், விளையாட்டு, இளைஞர் முன்னேற்றம் ஆகிய துறைகளும், ஹாம்லெட்சன் டோலிங்குக்கு நகர்ப்புற மேம்பாட்டுத் துறை, தகவல் தொழில் நுட்பம் ஆகியவைகளும் வழங்கப்பட்டுள்ளன.
மலைப்புற மக்கள் ஜனநாயகக் கட்சியை சேர்ந்த ஒரே உறுப்பினரான சாம்லின் மால்ங்கியாங்க்குக்கு பொது சுகாதார பொறியியல், சட்டப்பேரவை மேலாண்மை ஆகிய தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன.