ஷில்லாங்

ம்மை விவசாயிகள் கேட்டுக் கொண்டால் ஒரு நிமிடத்தில் பதவி விலகுவேன் என மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார்.

மேகாலயா மாநில ஆளுநராக சத்யபால் மாலிக் பதவி வகித்து வருகிறார்.   இவர் மத்திய பாஜக அரசுக்கு எதிரான கருத்துக்களை அவ்வப்போது தெரிவித்து சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறார்.   பாஜக அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி டில்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்துக்கு இவர் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறார்.

கடந்த மாதம் ராஜஸ்தான் மாநிலத்தில் சத்யபால் மாலிக் கலந்துக் கொண்டு உரையாற்றினார்.  அவர் தனது உரைய்ல் மத்திய பாஜக அரசு விவசாயிகள் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் மீண்டும் ஆட்சிக்கு வராது.   நாட்டில் பல கிராமங்களில் பாஜக தலைவர்கள் நுழைய்க் கூட முடியாது” எனத் தெரிவித்தார்.  இது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தற்போது அவர் கலந்து கொண்ட நிகழ்வில் சத்யபால் மாலிக், “யாராவது விவசாயிகள் பிரச்சினைகள் குறித்து ஏதாவது கூறினால், அது பெரிய அளவில் சர்ச்சையாகிவிடுகிறது. டில்லியில் போராடும் விவசாயிகள் கேட்டுக் கொண்டால் நான் எனது ஆளுநர் பதவியை ஒரு நிமிடத்தில் ராஜினாமா செய்வேன்.

யாரும் என்னை ஆளுநர் பதவியில் இருந்து நீக்க முடியாது. ஆயினும் எனது நலன் விரும்பிகள் சிலர், நான் ஏதாவது கூறவேண்டும் என்று விரும்புகின்றனர். இதுவரை நடந்த போராட்டங்களில் இன்று வரை 600 பேர் வீரமரணம் அடைந்த பெரிய அளவிலான போராட்டம் நடந்ததில்லை.
டில்லியில் ஆட்சியில் இருக்கும் தலைவர்கள் இறந்தவர்களுக்காக இரங்கலைக் கூடத் தெரிவிக்கவில்லை. நாடாளுமன்றத்தில்கூட இரங்கல் தீர்மானம் முன்வைக்கப்படவில்லை” எனத் தெரிவித்து அடுத்த சர்ச்சையைக் கிளப்பி உள்ளார்.