பெங்களூரு : காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பாக, கர்நாடக மாநில அரசு, இன்று  நிபுணர்களுடன்  ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறது.

மேகதாதுவின் அணை கட்ட தமிழகஅரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், தற்போது, அணை கட்ட திட்டமிடப்பட்டுள்ள பகுதியில் தேசிய பசுமை தீர்ப்பாயம் ஆய்வு செய்ய  குழு அமைத்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, கர்நாடக மாநில அரசு இன்று சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

காவிரி பாய்ந்து வரும் வழியான  கர்நாடக மாநிலம், ராம்நகர் மாவட்டம், மேகதாது அருகே அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டு வருகிறது. இங்கு அணை கட்டினால், தமிழகத்திற்கும் கிடைக்கும் தண்ணீர் தடைபடும் என்றதால், அதற்கு தமிழகஅரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

ஆனால், கர்நாடக அரசோ, , பெங்களூரு நகருக்கு குடிநீர் சப்ளை செய்ய ஏதுவாகவும், 400 மெகா வாட் மின்சாரம் தயாரிக்கவும், 9,000 கோடி ரூபாய் செலவில், அணை கட்ட கர்நாடகா திட்டமிட்டு, அதற்கான ஒப்புதலும் கேட்டு மத்தியஅரசை நாடியுள்ளது.

.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகஅரசு  உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், எந்தவரெமத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் ஒப்புதலின்றியும், வன பாதுகாப்பு சட்டம், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிப்பின்படியும், எந்த அனுமதியும் பெறாத நிலையில், அணை கட்டும் பகுதியில், கட்டுமான பொருட்களை குவித்துள்ளதாகவும், பத்திரிகையில் செய்தி வெளியானது.

இந்த விவகாரம் தொடர்பாக, சென்னையில் உள்ள தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம்,தாமாக முன் வந்து வழக்கு விசாரணை நடத்தியது. அப்போது இது தொடர்பாக பதிலளிக்கும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், அந்த பகுதியில் ஆய்வு செய்வதற்காக  மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மூத்த அதிகாரி, காவிரி நீர் மேலாண்மை மூத்த அதிகாரி அடங்கிய குழு நியமித்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள கர்நாடக மாநில அரசு, இன்று சட்ட நிபுணர்களை கூட்டி ஆலோசனை நடத்தி வருகிறது. முதல்வர் எடியூரப்பா தலைமையில்,  மாநில அட்வகேட் ஜெனரல் பிரபுலிங்க நாவடகி, வெளி மாநில நீர் பிரச்னை நிபுணர்கள், மூத்த வழக்கறிஞர்கள் பங்கேற்றுள்ளனர்.

இதுகுறித்து, கருத்து தெரிவித்துள்ள கர்நாடக சட்டத்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை, கர்நாடக தனது உரிமை படி தண்ணீர் பயன்படுத்திகொள்ள அணை கட்ட திட்டமிட்டுள்ளோம். உச்ச நீதிமன்றத்தில் முழு தகவல் அறிக்கை சமர்பித்துள்ளோம். இத்தகைய வேளையில், தேசிய பசுமை தீர்ப்பாயம் ஆய்வு குழு அமைத்திருப்பது சரியா? என கேள்வி எழுப்பி உள்ளார்.