புத்ராஜயா,
மலேசியாவில் சட்டவிரோதமாக குடியேறி வாழ்ந்து வருபவர்களை வெளியேற்றும் மெகா நிகழ்வு அடுத்த மாதம் (ஜூலை) 1ந்தேதி தொடங்க இருப்பதாக மலேசிய குடியேற்றத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
நாட்டில் சட்ட விரோதமாக குடியேறி இருப்பவர்கள் வெளியேற இந்த மாதம் 30ந்தேதிதான் கடைசி என்றும், அதன்பிறகு அவர்கள் அனைவரும் வெளியேற்றப்படுவார்கள் என்று டைரக்டர் ஜெனரல் டடுக் முஸ்தாபர் அலி தெரிவித்து உள்ளார்.
மலேசியாவில் சட்ட விரோதமாக குடியேறி இருப்பவர்கள் வெளியேற கடந்த 2016ம் ஆண்டு மலேசிய அரசு உத்தரவிட்டது. இதன் காரணாக அந்நாட்டில் பணி புரிந்து வரும் இந்தியர்கள் உள்பட ஏராளமானோர் பெரும் பாதிப்பு அடைந்தனர். அதைத்தொடர்ந்து, அதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அதற்குள் அவர்கள் தங்களுக்குரிய வேலைவாய்ப்பு அனுமதிப் பத்திரம் பெற வலியுறுத்தப்பட்டது.
இந்த நிலையில், காலக்கெடு முடிவடைந்ததை தொடர்ந்து, சட்டவிரோதமாக குடியேறியவர்கள் ஜூலை 1ந்தேதி முதல் தீவிரமாக நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என்று மலேசிய அரசு தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து பேசிய குடியேற்றத்துறை டைரக்டர் ஜெனரல் டடுக் முஸ்தாபர் அலி, “தற்போது நாட்டில் எவ்வளவு பேர் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் இருக்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியவில்லை, ஆனால் சட்டத்தை அமல்படுத்துவதில் உறுதியாக இருப்பதாகவும், நாடு முழுவதும் சட்ட விரோதமாக குடியேறிய வர்களை தேடிப்பிடித்து வெளியேற்றுவோம் என்றும் இன்று உறுதி என்றும் தெரிவித்து உள்ளார்.
மேலும் சட்டவிரோதமாக குடியேறி உள்ளவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பது, பணியமர்த்துதல், பணி புரியும் வளாகத்தில் தங்க அனுமதிப்பது போன்றவை மிகப்பெரிய குற்றமாகும்.
இதுபோன்று அரசு உத்தரவுக்கு மாறாக செயல்படும் நிறுவனங்களுக்கு அதிகபட்சமாக 50ஆயிரம் ஆர்எம் அபராதமும், நிறுவன முதலாளிகளுக்கு 5 ஆண்டுகள் வரை சிறைதண்டனையும் விதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.