காத்மாண்டு: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமது அரசை ஆட்சிப் பொறுப்பில் இருந்து அகற்ற டெல்லியில் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன என்று நேபாள பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி குற்றம்சாட்டினார்.
காத்மாண்டு நகரில் உள்ள பிரதமரின் இல்லத்தில் மறைந்த கம்யூனிஸ்ட் தலைவர் மதன் பண்டாரி நினைவுக் கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் பேசும்போது இந்தப் புகாரை நேபாள பிரதமர் சர்மா வெளியிட்டார்.
அவர் மேலும் கூறியதாவது: நேபாள அரசு நேபாள நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்துடன் உள்ளது. பெரும்பான்மை ஆதரவு பெற்ற எனது அரசை கவிழ்க்க வகுக்கப்படும் அனைத்து திட்டங்களும் தோல்வியை தழுவும்.
நேபாளத்தின் புதிய எல்லைகளை காட்டும் வரைபடத்தை நேபாள நாடாளுமன்றம் அங்கீகரித்ததை டெல்லி விரும்பவில்லை. அதுவே எனது அரசை கவிழ்க்க திட்டம் தீட்டப்படுவதற்கு காரணம்.
நேபாள அரசு தன் உரிமையை வலியுறுத்தி அரசியல் சட்டத்தை திருத்த தீர்மானம் நிறைவேற்றி இருப்பது, டெல்லி அரசுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மக்களின் தேசிய உணர்வு அவ்வளவு பலவீனமானது அல்ல. எமது மக்களின் உரிமையை உலகுக்கு உணர்த்த புதிய வரை படத்துக்கு அங்கீகாரம் தரப்பட்டது இது குற்றமல்ல.
நேபாளத்தில் 15 நாட்களுக்கு ஒரு முறை பிரதமர்கள் மாற்றப்பட்டார்கள். இப்பொழுது பிரதமர் பொறுப்பிலிருந்து நான் நீக்கப்பட்டால் நேபாளத்தின் உரிமையை காக்க யாரும் குரல் கொடுக்க முன்வர மாட்டார்கள் . நான் என் சொந்த லாபத்துக்காக பேசவில்லை நேபாள நாட்டுக்காக பேசுகிறேன். நாடாளுமன்ற உரிமைக்காக பேசுகிறேன் என்று பிரதமர் சர்மா தெரிவித்தார்.