புதுடெல்லி: நாடாளுமன்றம், மாநில சட்டமன்றங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களுக்காக, ஒரே பொது வாக்காளர் பட்டியலை தயார் செய்யும் சாத்தியம் குறித்த கலந்துரையாடல் சந்திப்பை பிரதமர் அலுவலகம் நடத்தியுள்ளது.
இம்மாதம் 13ம் தேதி நடத்தப்பட்ட இக்கூட்டத்திற்கு, பிரதமரின் முதன்மைச் செயலாளர் பிகே மிஸ்ரா தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் 2 சாத்தியங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.
அரசியல் சட்டப்பிரிவுகள் 243K மற்றும் 243ZA ஆகியவற்றில் திருத்தங்கள் மேற்கொண்டு, நாட்டின் அனைத்து தேர்தல்களுக்கும் ஒரே வாக்காளர் பட்டியலை தயார் செய்வது. இரண்டாவது, மாநில அரசுகள் தங்களுக்கான சட்டங்களை ரத்துசெய்து, தேர்தல் கமிஷனின் வாக்காளர் பட்டியலை, உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலுக்காக ஏற்றுக்கொள்வது.
இக்கலந்துரையாடலில், கேபினட் செயலாளர் ராஜீவ் கெளபா, சட்டசபை செயலாளர் ஜி.நாராயண ராஜு, பஞ்சாயத்து ராஜ் செயலாளர் சுனில் குமார் மற்றும் தேர்தல் கமிஷனைச் சேர்ந்த 3 பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர் என்று கூறப்படுகிறது.