டில்லி,
யோகா குரு பாபா ராம்தேவை நான் சந்தித்திருக்க கூடாது, நாச் சந்தித்து தவறு என முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி வருத்தம் தெரிவித்தார்.
கடந்த 14ந்தேதி டெல்லியில் ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஏற்பாட்டில் நடந்த விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி பல தகவல்களை பகிர்ந்துகொண்டார்.
ஓய்வுபெற்ற ஜனாதிபதியான பிரணாப் முகர்ஜி தனது கடந்தகால வாழ்க்கை குறித்து சுவாரஸ்யமான தகவல்களை தெரிவித்து வருகிறார். தான் ஏன் பிரதமராகவில்லை என்றும், தனக்கு இந்தியா தெரியாததால்தான் பிரதமர் வாய்ப்பு கிட்டவில்லை என்றும் கூறியிருந்தார்.
மேலும், தான் மத்திய அமைச்சராக இருந்தபோது யோகா குருவான பாபா ராம்தேவை சந்தித்து இருக்கக்கூடாது என்று அப்போது நடந்த நிகழ்வுக்கு தற்போது வருத்தம் தெரிவித்தார்.
மேலும், அப்போது மன்மோகன்சிங் தலைமையிலான யுபிஏ-2 ஆட்சி காலம். அது 2011ம் ஆண்டு ஜூன் மாதம். அப்போது யோகா குரு பாபா ராம்தேவ், வெளிநாடுகளில் பதுக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணத்தை மீட்க வலியுறுத்தி, டெல்லியில் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்ள இருப்பதாக அறிவித்தார்.
அதற்கு சற்று முன்புதான், அன்னா ஹசாரே, ஊழலுக்கு எதிரான போராட்டம் டில்லியில் நடைபெற்றது. இது நாடு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. அதன் காரணமாக அப்போது ஆளும்கட்சிக்கு எதிராக பெரும் அலையை உருவாக்கி இருந்தது.
அதன் காரணமாகவே பாபா ராம்தேவின் போராட்டத்தை தவிர்க்க, மன்மோகன் அரசு மெனக்கட்டது. பாபா ராம்தேவ் டில்லியில் உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்துவிட்டு தனி விமானம் மூலம் டில்லிக்கு வந்தார். அவரை சமாதா னப்படுத்த அப்போதைய ஆளுங்கட்சி பெரும் முயற்சி மேற்கொண்டது. இரு மத்திய அமைச்சர்களை விமான நிலையம் சென்று பாபா ராம்தேவை சந்தித்து சமானப்படுத்த அறிவுறுத்தப்பட்டது. இது நாடு முழுவதும் பெரும் சர்சசையை ஏற்படுத்தியது.
இதுகுறித்து 6ஆண்டுகளுக்கு பிறகு,. தனது அந்த நடவடிக்கையை ‘தவறான கணிப்பின்’ அடிப்படையில் எடுத்த ஒரு நடவடிக்கையாக பிரணாப் முகர்ஜி ஒப்புக்கொண்டிருக்கிறார்.
‘அப்போது அதை நான் செய்திருக்க கூடாது’ என்றும் வருத்தம் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், பாபா ராம்தேவுடனான ‘அந்த சந்திப்பில் அரசியல் காரணங்கள் இருந்தன. ஏற்கனவே அன்னா ஹசாரே போராட்டத்தால் அரசுக்கு பிரச்னைகள் இருந்தன. எனவே ராம்தேவ் போராட்டத்தை ஆரம்பகட்டத்தில் தவிர்க்க விரும்பினோம். ராம்தேவ் தரப்புடன் பேச, எனக்கு சில தொடர்புகள் இருந்தன. அவர்களின் பெயரை குறிப்பிட விரும்பவில்லை.
அவர்களில் ஒருவர்தான், ‘ராம்தேவ் டெல்லிக்கு வரும் முன்பே அவரிடம் வேண்டுகோள் வைத்து பேசுங்கள். டில்லியில் அவரது ஆதரவாளர்களையும் சந்தியுங்கள். இதை நீங்கள் செய்தால், ராம்தேவுடன் நான் பேசுகிறேன். அதன்பிறகு உங்கள் பேச்சை அவர் கேட்பார்’ என்றார்.
பாபா ராம்தேவுடன் என்னால் சரளமாக இந்தியில் உரையாட முடியாத சிரமத்தை நான் அந்த நண்பரிடம் கூறினேன். அவர், ‘மொழிப் பிரச்னை இருந்தால் உங்களுடன் இன்னொருவரை சேர்த்துக் கொள்ளுங்கள்’ என்றார். அதற்காகவே கபில் சிபலையும் அழைத்துச் சென்றேன். ஒரு தவறான கணிப்பின் அடிப்படையில் எடுத்த அந்த முயற்சி அது. அதை நான் செய்திருக்க கூடாது. நான் செய்த தவறை ஒப்புக்கொள்வதில் தவறில்லை என நினைக்கிறேன்’ என குறிப்பிட்டார் பிரணாப் முகர்ஜி.