கொல்லம்:

கேரளா மாநிலம் கொல்லம் நகர போலீஸ் கமிஷனராக ஆஜிதா பேகம் என்ற பெண் ஐபிஎஸ் அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் இன்று அந்த பதவியை ஏற்றுக் கொண்டார். இதில் என்ன விசேஷம் இருக்கிறது. இது வழக்கமான நடைமுறை தானே என்று எண்ண வேண்டாம்…

ஆம்.. ஆஜிதா பேகம் தனது கணவரான ஐபிஎஸ் அதிகாரி சதீஷ் பினோவிடம் இருந்து தான் இந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளார். இவருக்கு முன்பு அவர் தான் கொல்லம் போலீஸ் கமிஷனராக இரு ந்தார். இவர் இந்த பதவியில் இருந்து மாற்றப்பட்டு பத்தனாம்திட்டா மாவட்ட முதன்மை காவல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து சதீஷ் பினோ கூறுகையில்,‘‘நாங்கள் இருவரும் ஒரே பிரிவு ஐ.பி.எஸ் அதிகாரிகள். பயிற்சியின் போதே ஆண், பெண் வேறுபாடுகள் கிடையாது. ஒன்றாகவே பயிற்சி பெற்றோம். ஒன்றாகவே பணியாற்றுகிறோம். நான் இது வரை 4 மாவட்டங்களில் பணியாற்றியுள்ளேன். இது 5வது மாவட்டம். ஆனால் இந்த முறை தான் மீடியாக்கள் அதிகம் முக்கியத்துவம் கொடுத்துள்ளனர்’’ என்றார்.

அஜீதா கூறுகையில்,‘‘ ஒரே மாவட்டத்தில் கணவன் மனைவி இருவரும் பொறுப்பில் இருப்பதை பொதுவாக காண முடியாது. என்னை பொருத்தவரை இதுவும் ஒரு மாவட்டம் தான். அதற்காக எனது பணியை மாற்றிக் கொள்ளமாட்டேன்’’ என்றார். இருவரும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துகொண்டனர். ஒரு மகனும், மகளும் உள்ளனர். பிரசவ விடுப்புக்கு பின் தற்போது தான் ஆஜிதா பணியில் சேர்ந்துள்ளார்.

அடிக்கடி இடமாற்றம் கொண்ட ஒரு பொறுப்புள்ள பணியில் எப்படி கணவன் மனைவி இருவரும் பணிபுரிகன்றீர்கள் என்ற கேள்விக்கு ஆஜிதா கூறுகையில், ‘‘இருவரும் இணைந்து குடும்பத்தை நடத்துவது மிகவும் சிரமமாக உள்ளது. இருவரும் கொல்லம் மாவட்டத்தில் தான் பணியாற்றினோம். பிரசவ விடுப்பிற்கு செல்வதற்கு முன் கொல்லம் புறநகர் எஸ்.பி.யாக இருந்தேன். அவர் கொல்லம் நகர கமிஷனராக இருந்தார். அதற்கு முன்பு எர்னாகுளம் குற்றப்பிரிவில் பணியாற்றிய போது அவர் எஸ்.பி.யாக இருந்தார். நாங்கள் வாரத்தில் இறுதி நாட்களில் தான் சந்தித்துக் கொள்வோம்’’ என்றார்.

புதிய கமிஷனராக பொறுப்பேற்றுள்ள ஆஜிதா, ‘‘பெண்கள், குழந்தைகள் பிரச்னை, போக்குவரத்து விபத்து, போதை தடுப்பு போன்ற பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பேன்’’ என்று ஆஜிதா தெரிவித்துள்ளார்.