கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சி மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ சேவையை தமிழ்நாடு அமைச்சர்கள் இன்று தொடக்கி வைத்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரூ.381 கோடியில் அமையவுள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கு அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2020ம் ஆண்டு ஜூலை 4ந்தேதி அடிக்கல் நாட்டினார். அப்போது, கள்ளக்குறிச்சி வட்டம், சிறுவாங்கூர் கிராமத்தில் 8.328 ஹெக்டேர் நிலப்பரப்பில் அரசு மருத்துவக் கல்லூரி நிறுவிட, 381 கோடியே 76 லட்சம் ரூபாய் அனுமதித்து நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதில் மத்திய அரசு 60 விழுக்காடு பங்களிப்பாக 195 கோடி ரூபாய் நிதியும், தமிழ்நாடு அரசு 40 விழுக்காடு பங்களிப்பாக 186 கோடியே 76 லட்சம் ரூபாய் நிதியும் வழங்கும். அதில் முதல் கட்டமாக தமிழ்நாடு அரசால் 110 கோடி ரூபாய் நிதியும், மத்திய அரசால் 50 கோடி ரூபாய் நிதியும் விடுவிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன.
அதன்படி, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரிக் கட்டிடங்கள் 132 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், மருத்துவமனைக் கட்டிடங்கள் 182 கோடியே 79 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், குடியிருப்பு மற்றும் விடுதிக் கட்டிடங்கள் போன்றவை 66 கோடியே 47 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்படும். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி 150 எம்பிபிஎஸ் இடங்களுடன் நிறுவப்பட்டுள்ளது-
இந்த மருத்துவக்கல்லூரிக்கான கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்ட நிலையில், இன்று , நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் ஆகியோர் தொடக்கி வைத்தனர்.