சென்னை: தமிழக மருத்துவ மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியலில் தெலுங்கானா மாநில மாணவர்களின் பெயர்கள் இடம்பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், இதுகுறித்து கண்காணிக்க தமிழக அரசு குழு அமைத்து உத்தரவிட்டு உள்ளது.
தமிழகத்தில் மருத்துவக் கலந்தாய்வு நேற்று தொடங்கி உள்ளது. இந்தநிலையில், தமிழகஅரசு வெளியிட்ட மருத்துவ மாணவர் சேர்க்கை ரேங்க் பட்டியலில் தெலுங்காமான மாநிலத்தை சேர்ந்த 34 மாணவர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தது. இது சர்ச்சையை ஏற்படுத்திய திமுக உள்பட அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
நாமக்கல்லைச் சேர்ந்த மாணவி ஒருவர் போலி இருப்பிடச் சான்றிதழ் வழங்கி தமிழ்நாடு மற்றும் கேரள மாநில கலந்தாய்வுக்கு விண்ணப்பித்து 2 தரவரிசை பட்டியலிலும் இடம் பெற்றிருப்பதாகத் தகவல்கள் வெளியானது. மாணவியின் தந்தை நாங்கள் முறைகேடு எதுவும் செய்யவில்லை தெரிவித்தார்.
இது குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், ‘ஒரு மாணவர் இரண்டு மாநிலங்களில் விண்ணப்பிப்பதில் தவறில்லை. இரண்டு மாநிலங்களிலும் அந்தந்த மாநில இருப்பிடச் சான்றிதழ் வழங்கினால் தான் தவறு’ என்று தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து பல்வேறு கட்சித்தலைவர்கள், மாணவர்கள் என பலரும் இதுகுறித்து தமிழக அரசு விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இந்த நிலையில் மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்றுள்ள மாணவர்களின் இருப்பிட சான்றிதழை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.