டெல்லி லெப்டினன்ட் கவர்னர் வினய் குமார் சக்சேனா 24 ஆண்டுகளுக்கு முன்பு தொடர்ந்த அவதூறு வழக்கு தொடர்பாக நர்மதா பச்சாவ் அந்தோலன் தலைவரும் சமூக ஆர்வலருமான மேதா பட்கர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த வழக்கில் நன்னடத்தை பத்திரங்களை சமர்ப்பிக்கத் தவறியதற்காக பட்கருக்கு எதிராக புதன்கிழமை (ஏப்ரல் 23) டெல்லி நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்டைப் பிறப்பித்தது.

பட்கருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், தென்கிழக்கு டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் உள்ள பட்கரின் வீட்டிற்கு இன்று காலை போலீசார் சென்று அவரை கைது செய்ததாக துணை காவல் ஆணையர் (தென்கிழக்கு) ரவி குமார் சிங் தெரிவித்தார்.
2000 ஆம் ஆண்டு தொடரப்பட்ட அவதூறு வழக்கில் பட்கரை குற்றவாளி என டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்து 5 மாத சிறைத்தண்டனை விதித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை விசாரித்த கூடுதல் அமர்வு நீதிபதி விஷால் சிங், பட்கரின் வயது, குற்றத்தின் தீவிரம் மற்றும் முந்தைய எந்த வழக்கிலும் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்படவில்லை என்பதைக் கருத்தில் கொண்டு ஏப்ரல் 8 ஆம் தேதி நன்னடத்தை காலத்தை விதித்தார்.
நன்னடத்தை காலத்தில், குற்றவாளிகள் சிறையில் வைக்கப்படுவதில்லை, ஆனால் அவர்களின் அன்றாட நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுகின்றன.
உத்தரவின்படி, ஏப்ரல் 23 ஆம் தேதிக்குள் பட்கர் நன்னடத்தை பத்திரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆனால் எந்த ஆவணங்களும் சமர்ப்பிக்கப்படாததால், நீதிமன்றம் அவர்களுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்டைப் பிறப்பித்தது.
டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனா, மேதா பட்கர் தனக்கு எதிராக வெளியிட்ட பத்திரிகை அறிக்கை அவதூறானது என்று குற்றம் சாட்டி, 2000 ஆம் ஆண்டு அவதூறு வழக்கு தொடர்ந்தார். அப்போது சக்சேனா தேசிய சிவில் உரிமைகள் கவுன்சிலின் தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.