டில்லி
போர் மூண்டுள்ள உக்ரைனில் சிக்கி உள்ள இந்தியர்களை மீட்க வெளியுறவுத் துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையே கடந்த 4 மாதங்களாக பதற்றம் நிலவி வந்தது. உக்ரைன் நாடு நேட்டோ அமைப்பில் சேர்க்க ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அதற்கு ஆதரவு அளித்தன. இதையொட்டி ரஷ்யப்படைகள் உக்ரைன் நாட்டு எல்லையில் குவிக்கப்பட்டன. நேற்று உக்ரைன் மீது ரஷ்யா போரைத் தொடங்கியது.
இதில் ரஷ்ய விமானப்படையினரால் உக்ரைனில் உள்ள விமான நிலையங்கள் அழிக்கப்பட்டன. இதனால் உக்ரைனில் உள்ள வெளிநாட்டினர் தங்கள் நாட்டுக்குத் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதில் இந்திய நாட்டினரும் ஏராளமானோர் உள்ளனர். அவர்களை மீட்டு இந்தியாவுக்கு அழைத்து வர இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்தியர்களை உக்ரைனில் இருந்து அழைத்து வர இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் பல குழுக்களை அனுப்பி உள்ளது. அவர்கள் உக்ரைன் நாட்டு எல்லை நாடுகளான ஹங்கேரி, போலந்து, ஸ்லோவக் குடியரசு மற்றும் ரோமோனிய நாடுகளுக்குச் சென்று அங்கே உக்ரைனில் உள்ள இந்தியர்களை வரவழைத்து அங்கிருந்து விமானம் மூலம் இந்தியாவுக்குக் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.