மாலே: மாலத்தீவுகளில் நடந்துள்ள நாடாளுமன்ற தேர்தலில், அதிபர் இப்ராகிம் முகமது சோலியின் கட்சி, பெரிய வெற்றியைப் பெறும் நிலையில் உள்ளது. தற்காலிக தேர்தல் முடிவுகள் இதை தெரிவிப்பதாய் உள்ளன.

மாலத்தீவு ஜனநாயக கட்சி என்று அழைக்கப்படும் அக்கட்சி, நாடாளுமன்றத்திலுள்ள மொத்தம் 87 இடங்களில், 60 இடங்கள் வரை கைப்பற்றும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்மூலம், அந்நாட்டு நாடாளுமன்றத்தில், அக்கட்சியின் கை பெரியளவில் ஓங்கும் எனத் தெரிகிறது.

கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான், அதிபருக்கான தேர்தலில் கூட்டணியோடு போட்டியிட்டு வென்றது இக்கட்சி. தற்போது, நாடாளுமன்றத்திற்கான தேர்தலில், கூட்டணி கட்சிகளின் விருப்பத்தையும் மீறி தனித்துப் போட்டியிட்டு, இந்தப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளார் அதிபர் இப்ராகிம் முகமது சோலி.

தேர்தலில் தனது கட்சி கொடுத்த வாக்குறுதிகளான, ஜனநாயக அமைப்புகளை வலுப்படுத்துதல், மக்களுக்கான சிறந்த சேவைகளை வழங்குதல் மற்றும் ஊழல் வழக்குகளை விசாரித்து தண்டித்தல் உள்ளிட்டவை நிறைவேற்றப்படும் என்றார் அதிபர் இப்ராகிம் முகமது சோலி.

– மதுரை மாயாண்டி