போபால் :
மத்தியபிரதேச மாநிலத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசை அந்த கட்சியின் மூத்த தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா கடந்த மார்ச் மாதம் கவிழ்த்தார்.
அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 22 பேர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, பா.ஜ.க.வில் சேர்ந்தனர். இதனால் காங்கிரஸ் பெரும்பான்மையை இழந்தது.
பா.ஜ.க.வின் சிவராஜ் சிங் சவுகான் முதல்-அமைச்சர் ஆனார். இதற்கு வெகுமதியாக சிந்தியா, மாநிலங்களவை உறுப்பினர் ஆக்கப்பட்டார்.
கடந்த ஜுலை மாதம் மேலும் 3 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பதவி விலகி, பா.ஜ.க.வில் இணைந்தனர்.இதற்கிடையில் 3 எம்.எல்.ஏ.க்கள் மரணம் அடைந்தனர்.
இதனால் மத்தியபிரதேச மாநிலத்தில் காலியாக உள்ள 28 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 3 ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.
காங்கிரஸ், பா.ஜ.க. மற்றும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிகள் தனித்தனியாக தேர்தலை சந்திக்கின்றன.
இந்த தேர்தலில் 9 இடங்களில் வென்றால் தான் , அந்த மாநிலத்தில் பா.ஜ.க, ஆட்சியில் நீடிக்க இயலும் என்ற நிலையில், “தேர்தல் முடிவுக்கு பிறகு நாங்கள் தான் ‘கிங் மேக்கராக’ இருப்போம்” என மாயாவதி கட்சி தெரிவித்துள்ளது.
இது குறித்து பேட்டி அளித்துள்ள பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ராம்காந்த் “இந்த இடைத்தேர்தலில் நாங்கள் 10 இடங்களில் வெல்வோம். பா.ஜ.க. நான்கு இடங்களுக்கு மேல் ஜெயிக்காது என கருத்து கணிப்புகள் சொல்கின்றன. எனவே அடுத்த ஆட்சியை நாங்கள் தான் தீர்மானிப்போம்” என்று தெரிவித்தார்.
– பா.பாரதி