லக்னோ: தனது தவறான அணுகுமுறையால், பாரதீய ஜனதா கட்சி, நாட்டின் அரசியலமைப்பு முறையை பலவீனப்படுத்துவதாக குற்றம் சாட்டியுள்ளார் உத்திரப்பிரதேச முன்னாள் முதல்வரும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமான மாயாவதி.

அவர் கூறியதாவது, “தற்போது பிறந்துள்ள இந்தப் புத்தாண்டு, கடந்தாண்டைப் போல் வேதனையானதாக அமைந்துவிடக்கூடாது. மத்தியில் மற்றும் மாநிலத்தில் அமைந்துள்ள பாரதீய ஜனதா அரசுகளின் மோசமான வகுப்புவாத செயல்பாடுகள் மற்றும் குறுகிய எண்ணங்களால் கடந்துபோன 2019ம் ஆண்டில் அரசியலமைப்பு மிகவும் பலவீனமடைந்தது.

இந்த நாடு பல மதத்தவர்களையும் உள்ளடக்கிய ஒரு மதசார்பற்ற நாடு என்பதை எப்போதும் மறக்கக்கூடாது. மக்கள் வெவ்வேறு மதங்களைப் பின்பற்றுவதோடு, தமக்கென தனியான வாழ்க்கைப் பண்பாடுகளையும் கொண்டுள்ளனர்.

எனவே, அவர்களின் நம்பிக்கைகளுக்கு நாம் மரியாதை கொடுக்க வேண்டும். அத்தகைய அம்சங்களை சீர்குலைக்காத வகையில் போராட்டங்கள் அமைய வேண்டும். வன்முறை என்பது கவலை அளிப்பது மட்டுமல்ல, துரதிருஷ்டவசமானதும் கூட. பொறுப்பான பதவிகளில் உள்ளவர்கள் கவனமாக செயல்பட வேண்டியுள்ளது” என்றார்.

மத்திய பாரதீய ஜனதா அரசுக்கு எதிராக முக்கிய அரசியல் தலைவரான மாயாவதி அபூர்வமாகவே கருத்துக்கூறி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.