ராமண்ணா வியூவ்ஸ்
 
1
மெரிக்காவில் செட்டில் ஆகிவிட்ட நண்பர், அவ்வப்போது சாட்டிங்கில் வருவார்.   மே தினம் குறித்து ஒரு கட்டுரை அனுப்பியிருந்தார். மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. அந்த கட்டுரை அப்படியே…
“தொழிலாளர் தினமான மே 1ம் தேதி பொது விடுமுறை” என்று சொன்னால், “அதுதான் தெரியுமே.. இந்தியா முழுதும் விடுமுறைதானே” என்பார்கள் பலர்.
ஆனால் உண்மை அதுவல்ல. தமிழகத்தில் இந்த நாளில் டாஸ்மாக் உட்பட அனைத்து மாநில துறை அலுவகங்களும் மூடப்படுவதால்,  இப்படி நினைத்துக்கொள்கிறர்கள் பலர்.
ஆனால், இந்தியாவில்  கேரளா மற்றும் தமிழகத்தில் மட்டுமே (மாநில அரசின் பொது) விடுமுறை. மற்றபடி இந்த இரு மாநிலம் உட்பட, இந்தியா முழுதும் மே 1 அன்று அதன் அலுவலகங்கள் முழுமையாக இயங்குகின்றன.
ஆனால், இதில் நடக்கும் அரசியல் கொஞ்ச நஞ்சமல்ல.
கடந்த 2014ம் ஆண்டு மே தின வாழ்த்து தெரிவித்த திமுக தலைவர் கருணாநிதி,  ‘1969 ஆம் ஆண்டில் மே முதல் நாளை சம்பளத்தோடு கூடிய பொது விடுமுறை நாளாக அறிவித்து சட்டம் இயற்றி நடைமுறைப் படுத்தியதுடன், வி.பி.சிங் பிரதமராக இருந்த காலத்தில் அவருக்குக் கோரிக்கை விடுத்து இந்தியா முழுவதிலும் மே தினத்திற்கு விடுமுறை விடச்செய்தது தி.மு.க. ஆட்சிதான்’ என்று தெரிவித்தார்.
ஆனால் மதிமுக அவைத்தலைவர் சு. துரைசாமி இது பொய் என்பதை வெளிப்படுத்தினார்.
“தமிழகத்தில் 1967-ம் ஆண்டு தி.மு.க வெற்றி பெற்று  அண்ணா முதலமைச்சராக மார்ச் மாதம் பொறுப்பேற்றார். ஏப்ரல் மாதத்தில் அன்றைய தமிழக அரசின் தலைமைச் செயலாளர் அவர்களை அழைத்து, ‘மே முதல் நாளை அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்’ என்று கூறினார்.
அதற்கு தலைமைச் செயலாளர், ‘இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்திலும் மே தினத்துக்கு விடுமுறை அறிவிக்கப்படவில்லை. 1957ல் கேரளத்தில் ஆட்சிக்கு வந்த கம்யூனிஸ்ட் கட்சி அரசுகூட மே தின விடுமுறை அறிவிக்கவில்லை. தமிழக அரசு அறிவித்தால், மத்திய அரசின் கோபத்துக்கு ஆளாக நேரும்’ என்றார்.
அதற்கு அண்ணா அவர்கள், ‘மத்திய அரசின் கோபத்தைப் பற்றி எனக்கு அக்கறை இல்லை. நாம் திட்டமிட்டபடி மே முதல் நாளை அரசு விடுமுறையாக அறிவிப்போம்’ என்று சொல்லியதோடு, அதன்படியே 1967 மே முதல் நாளை விடுமுறை நாளாக தமிழக அரசால் அறிவிக்கச் செய்தார்.
இந்தியாவின் வரலாற்றில் தொழிலாளர்களின் உரிமைப் போருக்கு உயர்வு தந்து, மே தினத்துக்கு விடுமுறை அறிவித்த பெருமை அண்ணா அவர்களுக்கே உரித்தானது” என்று தெளிவுபடுத்தினார் துரைசாமி.
 
2
இது ஒரு புறம் இருக்க.. ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ 1991ம் ஆண்டு சென்னை அசோக்லைலாண்ட் நிறுவன வாயிற் கூட்டத்தில்  ஆற்றிய உரையைக் கேளுங்கள்:
‘கடந்த ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதி (1990) நாடாளுமன்றம் கூடியது; அதற்கு முதல்நாள் 29 ஆம் தேதி நான் டில்லி சென்றேன். 30 ஆம் தேதி காலையில் 10 மணி அளவில் இந்தியாவின் துணை ஜனாதிபதியும், மாநிலங்களவையின் தலைவருமான சங்கர்தயாள் சர்மாவை அவர் அறைக்கு வருவதற்கு முன்னரே சென்று காத்திருந்தேன்.
அவர் வந்த பிறகு, நான் இன்று கேள்வி நேரம் முடிந்தவுடன் ஒரு சிறப்புத் தீர்மானம் கொண்டுவர அனுமதிதர வேண்டும் என்று கேட்டேன். என்ன தீர்மானம் என்று அவைத்தலைவர் கேட்டார். தொழிலாளர்களின் நாளான மே தினத்தை மத்திய அரசின் விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டுமென்ற கோரிக்கையை நான் எழுப்புவதற்கு வாய்ப்புத் தாருங்கள் என்று அவரிடம் கூறினேன். அவர் அனுமதி அளித்தார்.
எனக்கு அனுமதி கிடைத்ததை அறிந்தவுடன் ஜனதா தளத்தின் கமல் மொசார்க்கா அவர்களும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த குருதாஸ் தாஸ் குப்தா அவர்களும் என்னுடைய தீர்மானத்தை ஆதரித்துப் பேசுவதற்கு தங்கள் பெயர்களையும் கொடுத்தார்கள்.
கேள்வி நேரம் முடிந்த பிறகு, பிரதமர் வி.பி.சிங் அவையில் இருந்தபோது இந்தக் கோரிக்கையை எழுப்ப முயன்றேன். வி.பி.சிங் எழுந்து மக்களவைக்குச் செல்ல முயன்றபோது நான் அவர் அருகில் சென்றேன். நாங்கள் முக்கியமான கோரிக்கையை வைக்க இருக்கிறோம். நீங்கள் சிறிது நேரம் உட்கார்ந்து கேட்டுவிட்டுச் செல்லுங்கள் என்று வி.பி.சிங்கிடம் கூறினேன். அரசியல் பண்பாடும் நாகரிகமும் நிறைந்த வி.பி.சிங் எங்கள் கோரிக்கையை ஏற்று அமர்ந்திருந்தார்.
அப்போது எங்கள் கோரிக்கையை முன்வைத்து நான் பேசினேன். அதாவது திமுகழக அரசு பொறுப்பேற்றிருந்த 1973-1974 ஆம் ஆண்டுக்காலத்தில் மே தினத்தை அரசு பொதுவிடுமுறையாக அறிவித்திருக்கிறோம். மேற்கு வங்கத்திலும் கேரளத்திலும் மே தினம் விடுமுறையாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மத்திய அரசு மே தினத்தை விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டுமென்ற கோரிக்கையை முன் வைத்தேன். அந்தக் கோரிக்கையை ஆதரித்து நண்பர்கள் பேசினார்கள். என்னுடைய கோரிக்கையைப் பரிசீலிப்பதாகக் கூறிவிட்டு வி.பி.சிங் தன் அலுவலகத்திற்குச் சென்றார்.
எங்கள் கோரிக்கையை 30 ஆம் தேதி பகல் 11 மணிக்கு வைக்கிறோம். அன்று பகல் 1 மணிக்கு மே தின விடுமுறை அறிக்கை வெளி வர வேண்டும். அதற்காக நானும் நண்பர்களும் பிரதமர் அலுவலகத்திற்குச் செல்கிறோம். நாங்கள் உடனே பிரதமரைச் சந்திக்க வேண்டுமென்று பிரதமரின் செயலாளரைக் கேட்டோம். அதற்கு அவர் பிரதமர் ஜப்பான் நாட்டுக் குழுவோடு உரையாடிக் கொண்டிருக்கிறார் என்றும் அதன்பிறகு குடியரசுத் தலைவரைச் சந்திக்க அவர் மாளிகைக்குச் செல்ல இருக்கிறார் என்றும், நீங்கள் பிரதமரைச் சந்திக்க முன்னரே அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்றும் எங்களிடம் கூறினார்.
நாங்கள் பிரதமரைச் சந்திக்க வேண்டும் என்று ஒரு துண்டுச் சீட்டில் எழுதி, அதை பிரதமருக்கு அனுப்பி வையுங்கள் என்று செயலாளரிடம் கூறினோம். அந்தத் துண்டுச் சீட்டு உள்ளே அனுப்பி வைக்கப்பட்டது. பத்து நிமிட நேரங்கழித்து பிரதமருடைய அறைக்குள் எங்களை அழைத்தார்கள்.
உள்ளே சென்ற எங்களை மந்தகாசப் புன்னகையுடன் பிரதமர் வி.பி.சிங் எழுந்து நின்று வரவேற்று உங்கள் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது என்றும் பகல் 2.30 மணிக்கு நாடாளுமன்றத்தில் மத்திய அரசின் பொது விடுமுறை நாளாக, மே தினம் அறிவிக்கப்படும் என்று சொன்னார்” –
இப்படி முடிகிறது வைகோவின் பேச்சு.
ஆனால் இன்று வரை, மே 1 அன்று (இந்திய) மத்திய  அரசு விடுமுறை இல்லை என்பதே உண்மை.”