போர்ட் லூயிஸ்:
கிழக்கு ஆப்ரிக்காவின் இந்திய பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள குட்டி தீவு நாடு மொரீஷியஸ். இங்கு சோசலிச போராளி இயக்க கட்சி ஆட்சி செய்து வருகிறது. அந்நாட்டின் அதிபராக அமீனா குரிப் ஃபாகிம் உள்ளார். இவர் இந்நாட்டின் முதல் பெண் அதிபர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமராக பிரவிந்த் ஜூகுநாத் உள்ளார்.
இந்நிலையில் அதிபர் ஃபாகிமுக்கு ஆங்கோலன் தொழிலதிபருக்கு தொடர்புடைய பிளானட் எர்த் இன்ஸ்டிடியூட் என்ற தன்னார்வ கொண்டு நிறுவனம் ஒரு கிரெடிட் கார்டை வழங்கியுள்ளது. 2016ம் ஆண்டில் ஃபாகிம் துபாய் சென்ற போது அந்த கிரெடிட் கார்டை பயன்படுத்தி நகைகள் வாங்கியுள்ளார்.
அதேபோல் ஸ்வீடன், இங்கிலாந்து, இந்தியா, இத்தாலி பயணத்தின் போதும், அவரது நாட்டின் தலைநகரான போர்ட் லூயிஸிலும் கார்டை பயன்படுத்தி ஷாப்பிங் செய்துள்ளார். இதன் மூலம் அவர் ரூ.7.18 லட்சம் செலவு செய்துள்ளார். இந்த தகவல் அந்நாட்டு ரேடியாவில் கசிந்துவிட்டது.
இதையடுத்து அந்த பணத்தை கொடுத்துவிடுவதாக கடந்த மாதம் ஃபாகிம் அறிவித்தார். எனினும் பிரச்னை பூதாகரமாக வெடித்தது. இதையடுத்து அவர் அதிபர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இத்தகவலை பிரதமர் ஜூகுநாத் தெரிவித்துள்ளார். அவரது ராஜினாமா உடனடியாக ஏற்கப்பட்டுவிட்டது, எனினும் நாட்டின் 50வது சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு பின்னர் அவர் பதவியில் இருந்து விலகுவார் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
குற்றச்சாட்டுக்கள் காரணமாக பதவியில் இருந்து விலகுவது அந்நாட்டில் சர்வ சாதாரணமான விஷயமாக இருப்பது தெரியவந்துள்ளது. ஏற்கனவே பல அரசு உயர் அதிகாரிகள் ஊழல் குற்றச்சாட்டு, ஒழுக்கமற்ற நடவடிக்கை காரணமாக பதவி விலகியுள்ளனர். இந்த பட்டியலில் தான் தற்போது ஃபாக்கிமும் சேர்ந்துள்ளார்.
மேலும் முன்னாள் துணை பிரதமர் சோவ்குத்தலி சூதும் என்பவர் தவறான கருத்துக்களை தெரிவித்த காரணத்தால் பதவி விலகினார். கடந்த செப்டம்பரில் அட்டார்னி ஜெனரல் ரவி யெரிகோடு பண மோசடி குற்றச்சாட்டில் பதவி விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.