மொரிசியஸ் நாடாளுமன்ற தேர்தல் நவம்பர் 10ம் தேதி நடைபெற உள்ள நிலையில் நவம்பர் 11-ம் தேதி வரை சமூக வலைதளங்கள் தடைசெய்யப்படும் என்று அந்நாட்டு தேசிய தகவல் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.
தேசிய பாதுகாப்பு மற்றும் பொது பாதுகாப்புக்கு கடுமையான அச்சுறுத்தலாக உள்ள சட்டவிரோத பதிவுகளை கட்டுப்படுத்தும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
சமூக வலைதள ஊடகங்களை முடக்குமாறு இணைய சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு வழிகாட்டுதல் வழங்க நேற்று (அக். 31) மாலை மொரிசியஸ் அரசு அறிவுறுத்தியது.
இதனையடுத்து தேசிய தகவல் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் இன்று இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இந்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட வாய்ப்பு இருப்பதாக கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், வயர்டேப்பிங் ஊழல் தொடர்பாக, அரசியல்வாதிகள், வணிகர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் சமூக உறுப்பினர்களின் பதிவு செய்யப்பட்ட உரையாடல்கள் கடந்த மாதம் சமூக ஊடகங்களில் கசிந்ததை அடுத்து முன்னெப்போதும் இல்லாத வகையில் சமூக ஊடகங்கள் மீது இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.