கான்பெரா: ஆஸ்திரேலியாவின் ஆண்கள் கால்பந்து அணிக்கு சமமாக, பெண்கள் கால்பந்து அணியும் ஊதியம் பெறும் வகையிலான ஒப்பந்தம் முதன்முதலாக ஏற்பட்டுள்ளது.

இது உலகளவிலான ஒரு கவனிக்கத்தக்க ஒப்பந்தமாகும். ஊதியம் மட்டுமல்லாமல், போட்டிகளில் கிடைக்கும் பரிசுத் தொகையிலும், சமமானப் பங்கீடு, பெண்கள் கால்பந்து அணிக்கு வழங்கும் வகையிலும் ஒப்பந்தத்தில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

இதன்படி, ஃபிபா உலகக்கோப்பை கால்பந்துப் போட்டிக்கு தகுதிபெற்றால் பரிசுத் தொகையில் 40% மும், நாக்-அவுட் சுற்றுக்கு தகுதிபெற்றால் பரிசுத் தொகையில் 50% மும் அணிக்கு பிரித்து வழங்கப்படும்.

இதற்குமுன்னதாக, அந்நாட்டின் ஆண்கள் மற்றும் பெண்கள் கால்பந்து அணிகளுக்கு இடையிலான ஊதியம் மற்றும் பொருளாதார பயன்கள் தொடர்பான வித்தியாசம் அதிகம் இருந்தது. அமெரிக்க பெண்கள் கால்பந்து அணியினர் கடந்த மார்ச் மாதம் இந்த வேறுபாடுகள் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தபோதே, இந்த விவகாரம் ஆஸ்திரேலியாவிலும் சூடுபிடித்துக் கொண்டது.

பரிசுத் தொகையில் தங்களுக்கு சமமான பங்கீட்டை வழங்க வகைசெய்வது குறித்து, உலக கால்பந்து நிர்வாக அமைப்பான ஃபிபாவிடம் முறையிட்டு வந்தது ஆஸ்திரேலிய பெண்கள் அணி என்பது குறிப்பிடத்தக்கது.