டாக்கா: வங்கதேசத்தின் ராய்ப்பூரில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்ட கூட்டுப் பிரார்த்தனைக் கூட்டத்தால், ஏராளமானோருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இக்கூட்டத்தில் சுமார் 10000 பேர் கலந்துகொண்டார்கள் என்று கூறப்பட்டாலும், கலந்துகொண்டோரின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 30000 என்பதாக இருக்கலாம் என்கிறது பிபிசி அளிக்கும் தகவல்.
வங்கதேசத்தில் கொரோனா வைரஸால் ஒருவர் இறந்ததையடுத்து, இந்தக் கூட்டம் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அந்நாட்டில், இதுவரை 17 பேருக்கு கொரோனா தொற்றியிருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் கூறுகிறது. ஆனால், இத்தகவலை பலரும் சந்தேகிக்கின்றனர்.
லஷ்மிபூர் மாவட்டத்தின் ராய்ப்பூரில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு அரசின் அனுமதி பெறப்படவில்லை என்று கூறப்படுகிறது. அங்கு நடக்கும் இதுபோன்ற மதம் சார்ந்த கூட்டங்களுக்கு பொதுவாக அனுமதிகள் பெறப்படுவதில்லை என்றும் கூறுகிறார்கள்.
மலேஷியாவில் இதுபோன்ற மதம் சார்ந்து நடத்தப்பட்ட கூட்டத்தால்தான் அங்கே ஏகப்பட்ட மக்களுக்கு கொரோனா தொற்றி, இன்று அந்நாட்டின் எல்லைகளையே மூடும் அளவிற்கு நிலைமை மோசமாகியுள்ளது என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.