ரஷ்யாவில் மாஸ்லெனிட்சா (Maslenitsa) எனும் பெயரில் கொண்டாடப்படும் “போகி பண்டிகை”
மாஸ்லெனிட்சா, ரஷ்யாவில் கி.பி. 2 ம் நூற்றாண்டில் இருந்து கொண்டாடப்பட்டு வரும் ஒரு திருவிழா.
ரஷ்யாவின் பல்வேறு பகுதியில் இன்றளவும் கொண்டாடப்படும் இந்த திருவிழா, கிறிஸ்தவர்களின் புனித காலமான ஈஸ்டர் நோன்புடன் தொடர்புடையது.
கிறித்தவர்களின் பெரும்பான்மையானோர் “சாம்பல் புதன்” (Ash Wednesday) அன்று தங்களது புனித தவக்காலத்தை கடைபிடிக்க தொடங்குவார்கள்.
ஈஸ்டர் பண்டிகைக்கு 46 நாட்கள் முன்னர் வரும் புதன்கிழமையே “சாம்பல் புதன்”. அன்றைய தினம் முந்தைய ஆண்டு “குருத்தோலை ஞாயிறன்று” பெறப்பட்ட குருத்தோலையின் சாம்பலை தங்களது நெற்றியில் இட்டு நோன்புகாலத்தை துவங்குவார்கள்.
ரஷ்யா உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் பழமைவாத கிருத்தவர்கள் இந்த 46 நாட்கள் தவக்காலத்தை “பரிசுத்த திங்கள்” (Clean Monday) அன்று துவங்குவார்கள்.
இந்த ஆண்டு “சாம்பல் புதன்” பிப். 26 அன்று கடைபிடிக்கப்பட்டது, “பரிசுத்த திங்கள்” மார்ச் 2 அன்று கடைபிடிக்கப்படுகிறது.
ரஷ்யாவில் இந்த நோன்பு காலத்தை துவங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு பழமை வாய்ந்த திருவிழா நிகழ்ச்சிகள் களைகட்டி இருக்கும், ஞாயிறன்று “மன்னிப்பு ஞாயிறு” என்று கொண்டாடப்படும்.
ஞாயிறு அதிகாலை “போகி பண்டிகை” போல் நெருப்பு மூட்டி அதில் பழைய பொருட்களை தூக்கி வீசி கொண்டாடி மகிழும் திருவிழாவிற்கு மாஸ்லெனிட்ஸா என்று அழைக்கிறார்கள்.
இவ்வாண்டு இந்த திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது, இதனை குளிர்காலம் முடிந்து வசந்தகாலம் தொடங்கும் விழாவாகவும் சிலர் கூறுகிறார்கள்.
அவர்கள் எப்படி அழைத்தாலும், நம்மூர் போகிப்பண்டிகையின் மறுபதிப்பை பார்த்து ‘மார்கழிதான் ஓடிப்போச்சே….’ என்று மனதுக்குள் தாளம் போடும் உற்சாகம் நமக்கு…..
படங்கள் : தி மாஸ்கோ டைம்ஸ்