திருச்செந்தூர்: மாசித்திருவிழாவையொட்டி, அறுபடை வீடுகளில் ஒன்றான  திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று காலை கொடியேற்றப்பட்டது.  கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்களை அனுமதிக்காத நிலையில், தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், பக்தர்கள் அரகர கோஷம் எழுப்பி தங்களது மகிழ்ச்சியை கொண்டாடி முருகனை வழிபட்டனர்.

மாசி மாதம் மகத்துவம் நிறைந்த மாதம் இந்த மாதத்தில் மாசி பவுர்ணமி நாளில் தமிழகம் முழுவதும் பல ஆலயங்களில் தேரோட்டம், தெப்ப உற்சவங்கள் நடை பெறும். இந்த ஆண்டு மாசித்திருவிழாவையொட்டி திருச்செந்தூரில்  நேற்று மாலையானை மீது கொடிப்பட்டம் வீதி உலா வந்தது.  இதையடுத்து இன்று பக்தர்கள் அரகர கோஷத்துடன் கொடியேற்றப்பட்டது.

முன்னதாக இன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நட திறக்கப்பட்டது. அதையடுத்து, அதிகாலை 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. தொடர்ந்து, செப்புக் கொடி மரத்திற்கு பல்வேறு அபிசேக பொருட்களால் அபிஷேகம், நடைபெற்றது. பின்னர், காலை 5.20மணிக்கு மேளதாளம் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது. அப்போது கூடியிருந்த பக்தர்கள் அரோகரா முழக்கமிட்டு வழிபட்டனர். இதனைத் தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது.

2 ஆண்டுகளுக்கு பிறகு வெகு விமரிசையாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஏரளமான பக்தர்கள் கலந்துகொண்டதுடன்  திருவாவடுதிரை ஆதினம் அருணாச்சல தம்பிரான் சுவாமிகள், தக்கார் பிரதிநிதி டாக்டர் பாலசுப்பிரமணிய ஆதித்தன், ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோவில் அக்தார் கருத்தபாண்டி நாடார், இந்து முன்னணி மாநில துணை தலைவர் வி.பி.ஜெயக்குமார், தாசில்தார் சுவாமிநாதன், கோவில் உதவி ஆணையர் வெங்கடேஷ், கண்காணிப்பாளர்கள் ராஜ்மோகன், சொர்ணம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவின் முக்கிய நிகழ்வான 5ஆம் திருநாள் இரவு 7.30 மணிக்கு ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவகொழுந்தீஸ்வரர் கோவிலில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் குடவருவாயில் தீபாராதனை நடக்கிறது.

7ஆம் திருநாளான 13ஆம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு உருகு சட்டசேவை நடக்கிறது. காலை 8.30 மணிக்கு சுவாமி சண்முகர் வெற்றி வேர் சப்பரத்தில் எழுந்தருளுகிறார். சிவப்பு, வெள்ளை, பச்சை சாத்தி மாலை 4.30 மணிக்கு சுவாமி சண்முகர் சிவப்பு சாத்தி கோலத்தில் தங்க சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.

8ஆம் திருநாள் அதிகாலை சுவாமி சண்முகர் வெள்ளை சாத்தி கோலத்தில் வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா நடக்கிறது. அன்று பகல் 12 மணிக்கு மேல் சுவாமி சண்முகர் பச்சை சாத்தி கோலத்தில் பச்சை நிற கடைசல் சப்பரத்தில் எழுந் தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.

தெப்ப உற்சவம் விழாவின் சிகர நிகழ்ச்சியான மாசித்தேரோட்டம் 10ஆம் திருநாள் தேரோட்டம் 16ஆம் தேதி நடக்கிறது. அன்று காலை 6.30 மணிக்கு மேல் விநாயகர், சுவாமி, அம்பாள் தனித்தனி தேர்களில் எழுந்தருளி நான்கு ரதவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கின்றனர்.

11ஆம் திருநாளான 17ஆம் தேதி தெப்பத்திருவிழா நடக்கிறது. அன்று இரவு சுவாமியும் அம்மாளும் 11 முறை தெப்பத்தில் சுற்றும் தெப்ப உற்சவம் நடக்கிறது.