புதுடெல்லி: டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதன் மூலம் நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதைப் பெறுவேன் என்று தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார் பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம்.
இவர், 2020ம் ஆண்டிற்கான பத்ம விபூஷன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார். மொத்தம் 6 முறை குத்துச்சண்டை உலகச் சாம்பியன் பட்டம் வென்றுள்ள இவருக்கு, பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷன் ஆகிய விருதுகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன.
பத்ம விபூஷன் விருது என்பது, பாரத ரத்னாவுக்கு அடுத்த நிலையில் உள்ள விருதாகும். இதுவரை, இந்திய விளையாட்டுத் துறையில், கிரிக்கெட் வீரர் சச்சினுக்கு மட்டுமே அந்த விருது வழங்கப்பட்டுள்ளது. தற்போது மேரி கோமுக்கும் அந்த ஆசை வந்துள்ளது.
“நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா வெல்ல வேண்டுமென்பது எனது நீண்டநாள் கனவு. ஒருநாள் அது நனவாகும் என்ற நம்பிக்கை உள்ளது. எனக்கான உத்வேகம் சச்சினிடமிருந்து கிடைத்தது.
தற்போதைக்கு எனது கவனம் முழுவதும் டோக்கியோ ஒலிம்பிக் மீதுதான். நிச்சயம் தங்கம் வெல்வேன் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த வெற்றியின் மூலம் பாரத ரத்னா கிடைக்கும் என்று நம்புகிறேன்.
பத்ம விபூஷன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்கு பரிந்துரை செய்த அமைச்சர் & பிரதமருக்கு நன்றி” என்றார்.