மும்பை: இந்திய குத்துச்சண்டை வீராங்கணையும், 6 முறை உலகச் சாம்பியன் பட்டம் வென்றவருமான மேரி கோம் பெயர், இந்தியாவின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷன் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் இந்தப் பரிந்துரையை செய்துள்ளது. கடந்த 2006ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும், 2013ம் ஆண்டு பத்ம பூஷன் விருதும் வென்றவர் மேரி கோம்.
மேலும், மேரி கோம் தவிர, உலக சாம்பியனும், ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றவருமான பேட்மின்டன் வீராங்கணை பிவி சிந்துவின் பெயரை பத்ம பூஷன் விருதுக்கு பரிந்துரை செய்துள்ளது. இது நாட்டின் மூன்றாவது உயரிய விருதாகும்.
கடந்த 2017ம் ஆண்டே பிவி சிந்து பத்ம பூஷன் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டார். ஆனால், இறுதிப் பட்டியலில் அவரின் பெயர் இடம்பெறவில்லை. கடந்த 2015ம் ஆண்டு சிந்துவுக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்தது.
மேலும், வில்வித்தை வீரர் தருந்தீப் ராய், ஹாக்கி வீரர் எம்பி கணேஷ் ஆகியோரின் பெயர்கள் பத்மஸ்ரீ விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. பத்மஸ்ரீ என்பது நாட்டின் நான்காவது உயரிய விருதாகும்.