திருவனந்தபுரம்: இந்த தேர்தலுக்குப் பின்னர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது தேசியக் கட்சி அந்தஸ்தை இழந்துவிடுமென கூறியுள்ளார் கேரள எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா.
அவர் அளித்துள்ள நேர்காணலில் கூறியுள்ளதாவது; கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிட எங்களின் தலைவர் ராகுல் காந்தி எடுத்துள்ள முடிவானது, மாநில வாக்காளர்கள் மனதில் பெரிய மாற்றத்தை உண்டாக்கியுள்ளது.
மேலும், சபரிமலை விவகாரமும் முக்கியத் திருப்பத்தை உண்டாக்கும். கேரள முதல்வர் பினராயி விஜயன், சமூக மற்றும் மத நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறார். இதுவரை, கேரளாவை ஆண்டுள்ள கம்யூனிஸ்டுகளில் எவரும், மத மற்றும் சமூக நிறுவனங்களுடன் இத்தகைய மோதல் போக்கை கடைப்பிடித்ததில்லை.
ஒரு கம்யூனிஸ்ட் என்பவர், பணக்காரர் மற்றும் ஏழை என்று இரண்டு வகையாகப் பிரித்துதான் மக்களைப் பார்ப்பார். ஆனால், கம்யூனிச கொள்கைகளை நிராகரித்து, சாதிய மற்றும் மதம் சார்ந்த நிறுவனங்களை ஊக்குவிக்கிறார் பினராயி விஜயன். எனவே, இதற்கான விளைவுகள் தேர்தலில் தெரியும்” என்றார்.
– மதுரை மாயாண்டி