கேரளாவில் முதல் முறையாக வெற்றிபெற்றுள்ள பாஜக தங்களது வெற்றியை கதகளி ஆடி கொண்டாடிவருகின்றனர்.
இந்த நிலையில், இடதுசாரி கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ஈ.கே. நாயனார் எனது அரசியல் குரு என்று வலதுசாரி பாஜக கட்சி எம்.பி. சுரேஷ் கோபி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அக்கட்சியின் வேட்பாளர் சுரேஷ் கோபி மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.
தனது பதவியேற்பை தொடர்ந்து கேரளா திரும்பிய சுரேஷ் கோபி இறுதினங்களுக்கு முன்பு கண்ணூரில் உள்ள மறைந்த கம்யூனிஸ்ட் தலைவர் ஈ.கே. நாயனார் வீட்டிற்கு சென்று அவரது மனைவி சாரதா-விடம் ஆசி பெற்றார்.
இதனைத் தொடர்ந்து இன்று திருச்சூரில் உள்ள மறைந்த காங்கிரஸ் தலைவர் கருணாகரன் நினைவிடத்திற்கு சென்றார்.
இந்த தேர்தலில் திருச்சூர் தொகுதியில் தன்னுடன் போட்டியிட்ட கருணாகரனின் மகனும் காங்கிரஸ் கட்சியின் கேரள மாநில தலைவருமான முரளீதரனை மூன்றாம் இடத்துக்கு பின்னுக்குத் தள்ளி வெற்றிபெற்றார் சுரேஷ் கோபி.
இருந்தபோதும் கருணாகரனின் குடும்பத்தினருடனான நெருக்கமான நட்பு காரணமாக அவரது நினைவிடத்திற்குச் சென்ற சுரேஷ் கோபி பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், தனக்கு ஈ.கே. நாயனார் மற்றும் கருணாகரன் குடும்பத்துடன் நல்ல நட்பு இருப்பதாகக் கூறினார்.
மேலும், இந்திரா காந்தி ‘இந்தியாவின் அன்னை’ என்று புகழாரம் சூட்டிய சுரேஷ் கோபி, மறைந்த முதல்வர் கருணாகரன் கேரள மாநில காங்கிரஸ் கட்சியின் தந்தை என்று வர்ணித்தார்.
கருணாகரனை அப்படி குறிப்பிடுவதால் மற்ற தென் இந்திய காங்கிரஸ் தலைவர்களை அவமதிப்பது எனது நோக்கம் அல்ல என்று தெளிவுபடுத்திய அவர் மறைந்த கம்யூனிஸ்ட் தலைவர் ஈ.கே. நாயனாரை தனது அரசியல் குரு என்று கூறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.