சென்னை
தற்போது பயிற்சி முடிந்து ராணுவ அதிகாரிகளாக பொறுப்பேற்கும் 332 பேரில் மறைந்த ராணுவ வீரர்களின் மனைவிகளும் உள்ளனர்.
சென்னை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் பயிற்சியில் தேர்ச்சி பெற்று 332 பேர் அதிகாரிகளாக பொறுப்பு ஏற்கின்றனர். அவர்களில் போரில் மரணம் அடைந்த வீரர்களின் மனைவிகளும் அடங்குவர். அவர்களைப் பற்றிய விவரங்கள் இதோ :
கடந்த 2015ஆம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் குப்வாரா மாவட்டத்தில் தீவிரவாதிகளை அழித்து அந்த போரில் வீர மரணம் அடைந்தவர் சந்தோஷ் மகாதிக். இவர் மனைவி சுவாதி மஹாதிக். கார்திகா, சுவராஜ் ஆகிய இரு குழந்தைகளின் தாயான இவர் வயது 38. கணவரை இழந்த இவர் தானும் ராணுவத்தில் சேர்ந்து பணி புரிய விரும்பினார். ராணுவத்தில் சேர வயது வரம்பான 27 வயதை இவர் தாண்டி விட்ட படியால், பல போராட்டங்களுக்குப் பின் இவரை ராணுவம் பயிற்சிக்கு எடுத்துக் கொண்டது. ஆண்களுக்கு வழங்கப்பட்டது போலவே தனக்கும் கடுமையான பயிற்சி வழங்கப்பட்டது என சொல்லும் சுவாதி தேர்ச்சி பெற்று விரைவில் புனேவில் உள்ள ராணுவ முகாமில் சேர உள்ளார்.
நிதி மிஸ்ரா என்னும் மற்றொரு ராணுவ அதிகாரியின் கணவர் போரில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது மாரடைப்பால் காலமானார். நிதி தனது எம் பி ஏ படிப்பை முடித்து விட்டு ஒரு நிறுவனத்தில் மனிதமள மேம்பாட்டு அதிகாரியாக பணியாற்றி வந்தார். அப்போது ப்ரியா என்னும் வீரரின் மனைவி மறைந்த தன் கணவரைப் பின்பற்றி ராணுவத்தில் இணைந்ததை அறிந்தார். தானும் ராணுவத்தில் சேவை செய்ய விரும்பி நுழைவுத் தேர்வில் கலந்துக் கொண்டார். தனது 8 வயதுக் குழந்தையை கவனித்தபடி நுழைவுத் தேர்விலும் கலந்துக் கொண்ட இவரால் ஐந்தாவது முறைதான் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற முடிந்தது. பிறகு பெற்றோரிடம் குழந்தையை ஒப்புவித்து விட்டு தற்போது பயிற்சியை முடித்து விட்டு ஜான்சி பகுதியில் உள்ள ராணுவ முகாமில் சேர உள்ளார் நிதி மிஸ்ரா.
இந்தப் பெண்கள் இருவரும் ராணுவ அதிகாரிகளாக தேர்ந்தெடுக்கப் படுவதற்கு முதல் நாள் தான் நிர்மலா சீதாராமன் ராணுவ அமைச்சராக பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத் தக்கது.