டெல்லி: ஜனவரி 30ந்தேதி தியாகிகள் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், மறைந்த தேசத்தலைவர்களுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்த வேண்டும் என மத்திய உள்துறை உத்தரவிட்டுள்ளது.

இந்திய நாட்டின் விடுதலைக்காக  இன்னுயிரை கொடுத்த, சுதந்திர போராட்ட வீரர்களுக்கு  அஞ்சலி செலுத்தும் விதமாகவும் அவர்களது தியாகத்தை கவுரவப்படுத்தும் நோக்கிலும்,   தேசத்தந்தை மகாத்மா காந்தியின் மறைந்த நாளான  ஜனவரி 30ந்தேதி தியாகிகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.( 1948 ஜன.30ம் தேதி காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்பட்டார்)

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 30ம் தேதி தியாகிகள் நினைவு தினத்தன்று,   டெல்லி ராஜ்கோட்டில் உள்ள காந்தி சமாதியில் குடியரசுத் தலைவர், பிரதமர், பாதுகாப்பு அமைச்சர் உள்பட அரசியல் கட்சியினர்  அஞ்சலி செலுத்த உள்ளனர்.

இந்த நிலையில், தியாகிகள் தினமான ஜனவரி 30ம் தேதி முற்பகல் 11 மணி  முதல் 2 நிமிடம்  அனைவரும் மவுனம் அஞ்சலி செலுத்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு, மத்திய உள்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.