கோவை:

பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டின் நிறுவன கேஷியர் பழனிச்சாமி மர்மான முறையில் குட்டையில் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அவரது மர்ம மரணம் பல்வேறு சந்தேகங்களை கிளப்பி உள்ளது.

இதையடுத்து, அவரது குடும்பத்தினர், சிபிசிஐடி விசாரணை  நடத்தி உண்மையை வெளிக்கொணர வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லாட்டரி அதிபர் மார்ட்டினின் உதவியாளர் பழனிச்சாமி மரணம் குறித்து சிபிசிஐடி விசாரணை கோரிய மனு மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது.

கடந்த ஏப்ரல் 30-ம் தேதி வருமான வரித்துறையினர்  பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்த சுமார் 70 நிறுவனங்களில்  சோதனை நடத்தினர். அத்துடன் அவரது நிறுவன ஊழியர்களிடமும் விசாரணை நடத்தினர்.

அப்போது மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ் நிறுவனராக உள்ள  ஹோமியோபதி கல்லூரியில் காசாளராகப் பணிபுரிந்து வந்த கோவை வடமதுரையைச் சேர்ந்த பழனிச்சாமியிடம் வருமான வரித்துறையினர் தொடர் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் கடந்த  மே 3-ம் தேதி பழனிச்சாமியின் உடல்  வெள்ளியங்காடு அருகே உள்ள குட்டையில் காசாளர் பழனிச்சாமி பிணமாக கிடந்தது தெரிய வந்தது.

அவரது மர்ம மரணம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பிய நிலையில், வருமான வரித்துறை யினரின் சித்ரவதை காரணமாகவே தன் தந்தை மரணம் அடைந்துள்ளதாக முதலில் கூறப்பட்டது. பின்னர் அவரது மனைவி, தனது கணவரின் சாவுக்கு மார்ட்டின்தான் காரணம் என்று குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த பரபரப்பான நிலையில், பழனச்சாமியின் உடலில்  ரத்த காயங்கள் இருப்பதால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும், இதுதொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றும்,  தன் தந்தையின் உடலை தங்கள் தரப்பு கூறும் ஒரு மருத்துவரை வைத்து மறு பிரேதப் பரிசோதனை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும், பழனிச்சாமியின் மகன் ரோஹின் குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுமீதான விசாரணை நாளை நடைபெறும் என்று தெரிகிறது.