சென்னை: சென்னையை மழை வெள்ளம் மற்றும் வறட்சியில் இருந்து பாதுகாக்க சதுப்பு நிலங்கன் அவசியம் என இதுதொடர்பாக நடத்தப்பட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக் ‘கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் அக்டோபர் 15ந்தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் சென்னை உள்பட பல பகுதிகளில் அவ்வப்போது மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி, ஊருக்குள் நீர் புகும் நிலை உருவாகி உள்ளது. வடகிழக்குப் பருவமழையால் சென்னை முதல் கன்னியாகுமரி வரை வெள்ள நீரானது குளங்களின் கரைகளை உடைத்து, சாலைகளைச் சேதப்படுத்தி, வீட்டுக்குள் புகுந்து, பயிர்களையும் முழ்கடித்துப் பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.
41,127 குளங்களைக் கொண்டுள்ள தமிழ்நாட்டில் இது எப்படி நடக்க முடியும்? என கேள்வி எழுப்பட்டு வந்தாலும், தற்போது பெய்துள்ள மழைநீர் ஏன் குளம் குட்டைகளுக்கு செல்லவில்லை என்பதும் சிந்திக்க வேண்டியதாக உள்ளது. ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகள், மற்றும் பேராசை கொண்ட மக்களால், பல பகுதிகளில் உள்ள நீர் நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டு, கட்டிங்களாக மாறியதே, இன்றைய மழைக்காலத்தின்போது ஏற்படும் பிரச்சினைக்கு காரணம் என குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
குறிப்பாக தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையின் பல பகுதிகள் ஒருநாள் மழைக்கே மக்கள் வாழ்வதற்கு தகுதியற்ற பகுதியாக மாறி வருகிறது. 2017 ஆம் ஆண்டு நிலவரப்படி, மொத்த நீரின் அளவு 339 mcft ஆக இருந்தது. மற்றும் நிலத்தடி நீர் ரீசார்ஜ் 170 mcft இருந்தது. விரிவாக்கப்பட்ட சென்னை பெருநகரப் பகுதி (சிஎம்ஏ) கிட்டத்தட்ட 4,100 நீர்நிலைகளைக் கொண்டுள்ளது, இதில் 150,000 மில்லியன் கன அடி சேமிப்புத் திறன் உள்ளது. மேலும் பல பகுதிகளி சதுப்பு நிலங்களாக அமைந்துள்ளன. இது, மழை காலத்தின்போது, நீரை மாசுபடுத்தும் அம்சங்கள், வண்டல் ஆகியவற்றைத் தடுத்து, இயற்கை வடிகட்டியாக செயல்பட்டு நிலத்தடி நீர் மட்டத்தை பாதுகாத்து வருகின்றன.
ஆனால், தற்போதை நிலை, வேறு மாதிரியாக உள்ளது. பல நீர் நிலைகள், சதுப்பு நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு மாபெரும் கட்டிடங்களாக பிரமாண்டமாக எழுந்து நிற்கிறது. இதனால், பூமிக்கடியில் சென்று தேங்க வேண்டிய மழைநீர், வீடுகளுக்குள் சென்று தேங்கி நிற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. அதுபோல கோடை காலங்களில், குடிநீர் கிடைப்பதிலும் சிக்கம் எழுந்துள்ளது.
சென்னையில் பள்ளிக்கரணை, பழவேற்காடு, எண்ணூர் ஆகிய இடங்களில் சதுப்பு நிலங்கள் அமைந்துள்ளன. நீரை மாசுபடுத்தும் அம்சங்கள், வண்டல் ஆகியவற்றைத் தடுக்கும் இயற்கை வடிகட்டியாக சதுப்பு நிலங்கள் செயல்படுகின்றன. ஆறுகள், ஏரிகள், சிறிய அளவிலான ஓடைகள் போன்றவற்றின் நீரை வறட்சிக் காலங்களில் பயன்படுத்தும் வகையில், ஒரு பஞ்சு போல உறிஞ்சி சேமித்து வைக்கும் ஒரு சூழலியல் அமைப்பாக இந்த சதுப்பு நிலங்கள் திகழ்கிறது.
இதையடுத்து, சென்னையில் நீர் மேலான்மை துறை சார்பில், ஆய்வு செய்யப்பட்டது. அதன் ஆய்வறிக்கை தற்போது வெளியாகி உள்ளது. கடந்த 2019ம் ஆண்டு கோடையில் சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் முக்கிய நீர்நிலைகள் வறண்டதையும், நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததையும் இந்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது. சதுப்பு நில அழிவின் காரணமாக, 2015, 2023 ஆகிய ஆண்டுகளில் சென்னை மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே, ஆக்கிரமிப்பில் உள்ள சதுப்பு நிலங்களை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டிய அவசியம் உள்ளது.
சதுப்பு நிலங்கள், குளம் குட்டை போன்ற நீர் நிலைகள் பறவைகள் இனப்பெருக்கம் செய்யும் தளமாகவும், தாவரங்கள் மற்றும் விலங்குகளுக்கான இயற்கை வாழ்விடமாகவும் அவை செயல்படுகின்றன. இதன்மூலம், வறட்சி, வெள்ளம் ஆகியவற்றைத் தடுப்பதில் சதுப்பு நிலங்கள் எவ்வாறு துணைபுரிகின்றன என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.
குறிப்பாக, பள்ளிக்கரணை சதுப்பு நிலம் இயற்கையாக அமைந்த பகுதியாகும். இது சுமார் 250 சதுர கி.மீ. அளவுக்கு பள்ளிக்கரணை சதுப்புநிலம் பரவியுள்ளது. அந்த சதுப்புநிலம், கண்ணாடி விரியன் எனப்படும் பாம்பு மற்றும் அரிவாள் மூக்கன், நீளவால் தாழைக்கோழி உள்ளிட்ட பறவைகள் போன்ற அழிந்துவரும் உயிரினங்களின் வாழ்விடமாக பள்ளிக்கரணை விளங்குகிறது. அதன் கிழக்கு சுற்று எல்லை, பக்கிங்காம் கால்வாய், ராஜிவ்காந்தி சாலை ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது. அப்பகுதி, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் மையமாக உள்ளது. தெற்கு, மேற்கு எல்லைகள் குடியிருப்புகள் மற்றும் பல்வேறு நிறுவனங்களால் நிறைந்துள்ளன. கடைசியாக எஞ்சியிருக்கும் சதுப்புநிலப் பகுதிகளில் ஒன்று.
ஆனால், நகரமயமாக்கல் காரணமாக இந்த சதுப்பு நிலங்கள் பெருமளவில் அழிக்கப்பட்டதால், காலநிலை மாற்றத்தால் வறட்சி, வெள்ளம் ஆகிய இயற்கைப் பேரிடர்களால் சென்னை மக்கள் பாதிக்கப்படுவதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக தமிழகத்தில் சென்னை பெருநகரம் வேகமெடுக்கும் நகரமயமாதல் காரணமாக, அதன் சதுப்பு நிலப் பரப்பில் 85% பகுதியை இழந்துள்ளதாக தெரிவித்துள்ளது. சென்னையில் சதுப்புநிலங்கள் குறைந்துள்ளதால் ஏற்படப் போகும் பாதிப்புகள் குறித்தும், நிலத்தடி நீர்வளத்தைப் புதுப்பித்தல், வெள்ளத் தடுப்பு ஆகிய முக்கியமான இயற்கை செயல்பாடுகள் இதனால் பாதிக்கப்படுவதாக குறிப்பிடுகிறது.
வறட்சி, வெள்ளம் ஆகிய இயற்கைப் பேரிடர்களில் இருந்து காக்கும் சதுப்பு நிலங்களின் அழிவால் வெள்ள பாதிப்பு மற்றும் வறட்சி அதிகரித்து காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
நிலத்தடி நீரை மீள்நிரப்பு செய்யவும், தண்ணீரைத் தக்க வைக்கவும் சதுப்பு நிலங்கள் இல்லாத காரணத்தால், சென்னையின் ஒரு கோடியே 12 லட்சம் மக்கள், தண்ணீர்ப் பற்றாக்குறையால் குடிக்க, குளிக்க, சமைக்க என தங்கள் நீர்த்தேவையை லாரிகள் மூலம் பூர்த்தி செய்துகொள்ள வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர். எனவே, எஞ்சியிருக்கும் சதுப்பு நிலங்களை காக்க வேண்டியதன் அவசியத்தை இந்த ஆய்வறிக்கை சுட்டுகிறது. மேலும், அதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளது.
இந்த அறிக்கை குறித்து கூறிய நீர்வளத்துறை அதிகாரிகள், ‘‘சென்னையில் உள்ள சதுப்பு நிலங்களை பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சதுப்பு நிலங்களை பாதுகாப்பதற்காக தமிழ்நாடு அரசு ‘‘தமிழ்நாடு வெட்லாண்ட் மிஷன்’ என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டம் மூலம் பள்ளிக்கரணை, பழவேற்காடு போன்ற பெரிய சதுப்பு நிலங்கள் மீதுதான் கவனம் செலுத்துகிறது.
நகராட்சி மற்றும் நீர்வளத்துறை இணைந்து இதற்காகப் பணியாற்றுகிறோம். மக்களும் இதற்கான ஒத்துழைப்பைத் தரவேண்டும். நீர்நிலை பகுதிகளில் கட்டிடங்கள் கட்டக் கூடாது என பல உத்தரவுகள் உள்ளது. இதை மீறி கட்டப்பட்டிருக்கும் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், சென்னை மற்றும் புறநகரில் இருக்கும் ஏரிகளை மறுசீரமைப்பு செய்யும் பணிகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது,’’ என்றனர்.
இந்த அறிக்கை குறித்து கூறிய சூழியல் ஆர்வலர்கள், ‘‘சதுப்பு நிலங்கள், நீர்நிலைகள் குறித்த நிலவரை தொகுப்பை அரசு (வரைபடம்) உருவாக்க வேண்டும். சதுப்பு நிலங்களின் பவுதீக எல்லை என்பது வேறு, அதன் சூழலியல் எல்லை என்பது வேறு. சூழலியல் எல்லை என்பது, சதுப்பு நிலத்தின் எல்லையையும் தாண்டியது. நீர்பிடிப்புப் பகுதி வரை சதுப்பு நிலத்தின் எல்லை உள்ளது. இதை மனதில் வைத்து அதன் எல்லையை வரையறுக்க வேண்டும் அதன் எல்லைகளைத் தெளிவாக வரையறுத்து அங்கு யாரும் ஆக்கிரமிக்காமல் பாதுகாக்க வேண்டும். மேலும் அந்த நிலங்களில், கழிவுகள், கட்டிட கழிவுகள் கொட்டப்படுவதை கண்காணித்து தடுத்து, வறட்சி மற்றும் வெள்ள பாதிப்பில் இருந்து சென்னை மக்களை காப்பாற்ற சதுப்பு நிலங்களை மீட்டு அரசு பாதுகாக்க வேண்டும்,’’ என்றனர்.
உலக காட்டுயிர் நிதியம் சமீபத்தில், ‘தி லிவிங் பிளானட் 2024’ என்ற ஆய்வறிக்கையில் காலநிலை மாற்றம், சூழலியல் பிரச்னைகளால் ஏற்படும் அபாயங்கள் குறித்து அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டு உள்ளது. அதில், அமேசான் காடுகள் இழப்பால் உலக வானிலை எப்படி பாதிக்கப்படுகிறது, கடல் நீரோட்டத்தில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக ஐரோப்பா, வட அமெரிக்காவில் வானிலையின் போக்கு எப்படி மாறுகிறது என்பது குறித்து, உலகளவில் நேரிட்டுள்ள பல சூழலியல் பாதிப்புகள் குறித்து விரிவாகப் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, கடந்த ஜுன் மாதம் இது தொடர்பான வழக்கறில், பதில்கூறிய தமிழ்நாடு அரச, நீர்நிலைகளை பாதுகாப்பது தொடர்பாக உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றிவருவதகாவும், கடந்த 2020ம்ஆண்டே இதுதொர்பாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டது. மேலும், . அதன் பரிந்துரைகளின்படி, அரசு புறம்போக்கு நிலங்களில் வழிகாட்டி மதிப்பீடு பூஜ்யம் என மாற்றப்பட்டுள்ளதாகவும், நீர்நிலைகளை பதிவுசெய்யக்கூடாது என பத்திரப்பதிவுத்துறை ஐஜி நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அதேபோல நீர்நிலை கட்டுமானங்களுக்கு எந்தவித மின்இணைப்பும் தரக்கூடாது, ஊரக வளர்ச்சித்துறை கட்டிடங்களுக்கான திட்ட அனுமதி அளிக்ககூடாது என பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமைச்செயலாளர் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் நீர்வள மேம்பாட்டுக்காக தனித்துறையே உருவாக்கப்பட்டு உள்ளது என்றும் ஆக்கிரமிப்புகள் இல்லாத நீர்நிலைகளை உருவாக்க கொள்கை முடிவு எடுக்கப்பட்டு கடந்த ஜீலை மாதம் அனைத்து மாவட்ட ஆட்சியளர்களும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டதாகவும் அதில் மாநிலம் முழுவதும் ஒரே கட்டமாக ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட சிறு குட்டைகள் குளங்களை உள்ளுர் விவசாயிகள் இளைஞர்களின் உதவியுடன் மீட்டெடுக்கப்பட உள்ளததாகவும், சுட்டிக்காட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.