ராஜ்கோட்

குஜராத்தில் பொதுத்தேர்வு விடைத்தாளில் கற்பனையாக கவர்ச்சிக்கதைகள் எழுதிய மாணவனுக்கு ஆசிரியர் தேர்ச்சி பெறும் அளவுக்கு மதிப்பெண் அளித்துள்ளார்.

குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியை சேர்ந்த மாணவர் ஒருவர் 12ஆம் வகுப்பில் பொருளாதார தேர்வு எழுதி உள்ளார்.  அதில் கேட்கப்பட்ட ஐந்து கேள்விகளுக்கு சம்பந்தம் இல்லாமல் பதில் எழுதியுள்ளார்.   அதாவது தானும் நடிகைகள் ராணி முகர்ஜி மற்றும் ஐஸ்வர்யா ராய் பச்சன் ஆகியோரும் காதல் புரிவதாக கவர்ச்சிக் கதைகள் எழுதி உள்ளார்.   கிட்டத்தட்ட பேச்சுத் தமிழில் சொல்லப்படும் “பிட்டுக் கதைகள்” தான் அந்த தேர்வில் விடையாக எழுதி உள்ளார்.

ஆனால் அவரது விடைத்தாள் திருத்தப்பட்டு அந்த பிட்டுக் கதைகள் அனைத்துக்கும் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது.  அவர் அந்தத் தேர்வில் 36 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.   பிறகு மேற்பார்வையாளரால் இந்த தவறு கண்டுபிடிக்கப்பட்டு அந்த மாணவருக்கு 14 மதிப்பெண்கள் குறைக்கப்பட்டு அவரது தேர்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.    மேலும் அந்த மதிப்பெண்களை வாரி வழங்கிய ஆசிரியருக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை குஜராத் உயர்நிலை மற்றும் மேல்நிலைக் கல்வி துணை தலைவர் ஆர் ஆர் தாக்கர் தெரிவித்துள்ளார்.  மேலும், “இந்த வருடம் 12ஆம் வகுப்பு விடைத்தாள்களை திருத்திய ஆசிரியர்களில் 1000 ஆசிரியர்கள் தவறாக திருத்தி உள்ளனர். அந்த தவறுகளுக்காக சுமார் ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளனர்.  திருத்துவதில் மட்டும் இன்றி மதிப்பெண்களை கூட்டுவதிலும் தவறு இழைத்துள்ளனர்.  இது மட்டும் இன்றி ஆனந்த் பகுதியை சேர்ந்த ஒரு மாணவன் ரசாயன விடைத்தாளில் தான், தனது அண்ணி, ஒரு குஜராத்தி சினிமா நடிகை, மற்றும் ஒரு சமையல் காரி ஆகியோர் உல்லாசமாக இருந்தது போல கற்பனைக் கதை எழுதி அதற்கும் மதிப்பெண் கொடுத்துள்ளதும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.