டில்லி:
அரசின் நலத்திட்டங்களுக்கு ஆதார் எண்ணை இணைப்பதற்கு மார்ச் 31ம் தேதி கடைசி என்ற காலக்கெடுவை நீட்டித்து உத்தரவிட உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
வங்கி கணக்கு, செல்போன், சமையல் காஸ் மற்றும் அரசின் நலத்திட்டங்களுக்கு வரும் மார்ச் 31ம் தேதிக்குள் ஆதார் எண்ணை இணைத்துவிட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட பல வழக்குகள் உச்சநீதிமன்ற அரசியல்சாசன அமர்வு முன்பு விசாரணை நடந்து வருகிறது.
இந்த விசாரணையின் போது கடந்த 13ம் தேதி வங்கி கணக்கு, செல்போன் இணைப்புடன் ஆதார் இணைக்க காலக் கெடு நிர்ணயம் செய்தததை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. வழக்கில் தீர்ப்பு வரும் வரை இதற்கு காலக்கெடு கிடையாது என்று தெரிவித்தது. எனினும் அரசு நலத்திட்டங்களுடன் ஆதார் இணைக்கும் பணியை தொடர்ந்து மேற்கொள்ள அரசுக்கு நீதிபதிகள் அனுமதி அளித்தனர்.
இந்நிலையில் அரசு நலத்திட்டங்களுடன் ஆதார் இணைக்க மார்ச் 31ம் தேதி கடைசி நாளாகும். இந்த காலக்கெடுவை நீட்டித்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்க கோரி அரசியல்சாசன அமர்வு முன்பு ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இதை விசாரித்தது.
அப்போது ஆதார் செயல்படுத்தம் உதாய் திட்ட சிஇஒ அஜய் பூஷன் பாண்டே நீதிபதிகளுக்கு விளக்கபடம் ஒன்றை ஒளிபரப்பி விவரித்தார். அதில் 88 சதவீத மக்கள் அரசு நலத் திட்டங்களுக்கு ஆதாரை இணைத்துவிட்டனர். இதில் சேகரிக்கப்பட்டுள்ள பயோ மெட்ரிக் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் அழிக்க கோடி கணக்கான ஆண்டுகள் ஆகும்’’ என்றார்.
மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் விஸ்வநாத் வாதிடுகையில்,‘‘உதாய் சிஇஒ கூறியவாரு இன்னும் 12 சதவீதம் பேர் ஆதாருடன் இணைக்கவில்லை. 12 சதவீதம் என்பது 14 கோடி மக்களாகும். இது பெரிய அளவு. அதனால் மார்ச் 31 என்ற காலக்கெடுவை நீட்டித்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’’ என்றார்.
‘‘தற்போதைய நிலையில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது. இது தொடர்பாக மனுதாரர் பதில் மனு தாக்கல் செய்து வாதிடலாம்’’ என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.