சென்னை: ஆட்டோ கட்டணத்தை உயர்த்த வலியுறுத்தி மார்ச் 19ஆம் தேதி சென்னையில் ஆட்டோ ஸ்டிரைக் நடைபெறும், அன்று ஆட்டோக்கள் ஓடாது என ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்து உள்ளது.

ஆட்டோ கட்டணம் தொடர்பாக, தமிழக அரசுடன் ஆட்டோ தொழிற்சங்கத்தின் பேச்சு வார்த்தை நடத்திய நிலையில், தங்களின் கோரிக்கையை ஏற்று ஆட்டோ கட்டணத்தை உயர்த்தாத திமுக அரசை கண்டித்து சென்னையில் வரும் 19 ஆம் தேதி 1 லட்சத்து 20 ஆயிரம் ஆட்டோக்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக, அனைத்து ஆட்டோ ஓட்டுநர் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, தமிழ்நாடு அனைத்து ஆட்டோ ஓட்டுநர் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள், அதன் தலைவர் பாலசுப்பிரமணியம் தலைமையில் சென்னை புரசை வாக்கத்தில் உள்ள சிஐடியு ஆட்டோ தொழிற்சங்க அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது கூறியதாவது,
”ஆட்டோ மீட்டர் கட்டணம் 12 ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருக்கிறது. குறைந்தபட்ச தொகையாக 25 கிலோ மீட்டருக்கு 12 ரூபாய் அரசு நிர்ணயித்துள்ளது. ஆனால் 12 ஆண்டுகளில் விலைவாசி உயர்ந்து உள்ளது. ஆகவே குறைந்தபட்ச தொகையாக 50 ரூபாயும், கிலோ மீட்டருக்கு 25 ரூபாயும் வழங்க வேண்டும் என தமிழக அரசை பலமுறை வலியுறுத்தியும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
ஆட்சிக்கு வந்தவுடன் ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்துவதாக திமுக கூறியது. ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு முதலமைச்சர் தொழிலாளர்களை கண்டுகொள்ளவில்லை.
ஓலா, ஊபர் உள்ளிட்ட தனியார் செயலிகள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக வாங்கி வருகின்றன. அதற்கு பதில் தமிழ்நாடு அரசு ஒரு செயலியை அறிமுகப்படுத்தினால் அரசுக்கும் வருவாய் வரும். ஆட்டோ தொழிலாளர்களும் பாதிப்பு அடையாமல் ஆட்டோக்களை இயக்க முடியும். ஆனால் அதனை எல்லாம் செய்யத் தவறிய திமுக அரசு ஆட்டோ ஓட்டுநர்களை குற்றவாளிகளை போல சித்தரிக்க புதிய மோட்டார் வாகன சட்டத்தில் உள்ள கியூ ஆர் கோடு ஆட்டோகளில் வலுக்கட்டாயமாக ஒட்டி வருகிறது.
திமுக அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து, மார்ச் 19 ஆம் தேதி சென்னையில் உள்ள ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஆட்டோக்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அரசு உடனடியாக ஆட்டோ தொழிலாளர்கள் பிரச்சினையில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தி உள்ளனர்.