சென்னை: தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் தாக்கல் மற்றும் கேள்வி-நேரம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்து உள்ளார்.
தமிழக சபாநாயகர் அப்பாவு நேற்று மாலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் மார்ச் 18 அன்று காலை10.00 மணிக்குச் சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப்பேரவை மண்டபத்தில் தொடங்க உள்ளதாகவும், அன்றைய தினமே தமிழக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றார்.
காலை 10.30 மணிக்கு 2022-23 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை பேரவைக்கு அளிக்கப்பெறும் என்றும், கடந்த ஆண்டைப் போலவே காகிதமில்லா பட்ஜெட்டாக இம்முறை தாக்கல் செய்யப்படும் என்றும் கூறியதுடன், 2022 – 23ஆம் ஆண்டிற்கான முன்பண மானிய கோரிக்கை வரும் 24ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்றும் அன்றைய தினம் 2021- 22 ஆம் ஆண்டின் இறுதி துணை நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் கூறினார்.
பட்ஜெட் தாக்கல் நேரலை செய்யப்படும் என்றார். அதைத்தொடர்ந்து சட்டப்பேரவையின் கேள்வி நேரமும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்றும் தெரிவித்தவர், பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் அன்றே அலுவல் ஆய்வு குழு கூடி சட்டப்பேரவை கூட்டத்தொடரை எத்தனை நாள் நடத்த வேண்டும் என்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும் கூறினார்.