டில்லி
போயிங் 737 மாக்ஸ் ரக விமானம் எதியோப்பியாவில் விபத்துக்குள்ளானதை தொடர்ந்து பல உலக நாடுகள் அந்த ரக விமானத்துக்கு இடைக்கால தடை விதித்துள்ளன.
எதியோப்பியாவில் கடந்த வாரம் போயிங் 737 மாக்ஸ் 8 ரக விமானம் விபத்துக்குள்ளானதில் பயணம் செய்த அனைவரும் மரணம் அடைந்தனர். கடந்த அக்டோபர் மாதம் இந்தோநேசியாவில் இதே ரக விமானம் விபத்துக்குள்ளானது. அப்போதும் பயணம் செய்த அனைவரும் மரணம் அடைந்தனர். இந்த ரக விமானங்களை உலகின் பல நாடுகளின் விமான நிறுவனங்கள் தங்கள் சேவைக்கு பயன்படுத்துவதால் அந்நாடுகள் அதிர்சிக்கு உள்ளாகின.
இவ்வகை விமானங்களை அதிகம் கொள்முதல் செய்த சீனா போயிங் 737 மாக்ஸ் ரக விமானங்கள் பறக்க இடைக்கால தடை விதித்தது. அத்துடன் இந்த விமானங்களின் பாதுகாப்பு குறித்த அறிக்கைகள், விமானத்தில் செய்யப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள், விமானத்தில் நடந்துள்ள கோளாறுகள் மற்றும் விபத்துக்கள் குறித்த தகவல்களை விமானக் கட்டுமான நிறுவனத்திடம் இருந்து கேட்டுள்ளது.
அதன் பிறகு இந்தியாவும் சீனாவை பின்பற்றி தடை விதித்தது. தற்போது பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதைப் போல் ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பில் உள்ள அனைத்து நாடுகளும் இந்த போயிங் 737 மாக்ஸ் ரக விமானங்களுக்கு இடைக்கால தடை விதித்துள்ளன. அத்துடன் இந்த விமானங்களை தயாரித்த அமெரிக்க நிறுவனம் மீது இந்த நாடுகள் வழக்கு தொடரவும் ஆலோசித்து வருகின்றன.
ஆனால் போயிங் 737மாக்ஸ் ரக விமானங்களுக்கு அமெரிக்கா தடை விதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். அந்நாட்டின் விமானப் பயண நிர்வாக அதிகாரி டான் எல்வெல், “இந்த போயிங் 737 மாக்ஸ் ரக விமானங்க்ள் குறித்து ஆராய்ந்த போது இந்த விமானங்கள் இயக்கத்தில் எவ்வித தவறும் தெரிய வரவில்லை. ஆகவே இந்த விமானங்களுக்கு தடை விதிக்க எந்த ஒரு அடிப்படை காரணமும் எங்களுக்கு தெரியவில்லை”என குறிப்பிட்டுள்ளார்.