டெல்லி: மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி பலர் பலியாகி உள்ளதற்க யோகி அரசுதான்  காரணம் என  எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி,  காங்கிரஸ் கட்சி தலைவரான மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டி உள்ளனர். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவுமாறு காங்கிரஸ் தொண்டர்களையும் தலைவர்களையும் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளனர்.

மேலும் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ்,  பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்பட எதிர்க்கட்சி தலைவர்களும் மாநில பாஜக அரசு மீது குற்றம் சாட்டி உள்ளனர்.

த்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த நிகழ்வு ஜனவரி 12ஆம் தேதி தொடங்கி வருகிற பிப்ரவரி 26 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் சந்நியாசிகள், துறவிகள், சாதுக்கள், சாத்விகள், கல்பவாசிகள், யாத்ரீகர்களை பொது மக்கள் உட்பட பலர் கலந்துகொண்டு திரிவேணி சங்கமத்தில் நீராடி வழிபடுவார்கள். கும்பமேளா நடைபெறும் காலங்களில் திரிவேணி சங்கமத்தில் நீராடுவதை பலரும் புனிதமாக கருதுகின்றனர். இதில் சுமார் 45 கோடி பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

அதற்கேற்ப பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கக் கோரி உத்தரவிட்ட உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், சில நாட்களுக்கு முன்பு ஹெலிகாப்டரில் சென்று மகா கும்பமேளா நடைபெற்று வருவதை ஆய்வு செய்தார். தொடர்ந்து நடைபெற்று வரும் கும்பமேளா நிகழ்வில் இதுவரை 10கோடிக்கும் அதிகமானோர் பங்கேற்றிருப்பதாகக் கூறப்படுகிறது.

மகா கும்பமேளாவில், இன்று மவுனி அமாவாசையையொட்டி நள்ளிரவு 2மணி  அளவில்   ஏற்பட்ட கொடிய நெரிசல்கள் காரணமாக பலர் காயமடைந்துள்ள நிலையில், 38 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை பெற்றுச்சென்றதாகவும் சிலர் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.  பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்பு எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர் என்ற செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்.

தவறான நிர்வாகமும், பொது பக்தர்களுக்குப் பதிலாக விஐபி நடமாட்டத்தில் நிர்வாகம் சிறப்பு கவனம் செலுத்துவதும் இந்த துயர சம்பவத்திற்குக் காரணம்… பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவுமாறு காங்கிரஸ் தொண்டர்களையும் தலைவர்களையும் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது ட்விட்டர் பக்கத்தில், “மகா கும்பமேளாவின் போது, ​​தீர்த்தராஜ் சங்கமக் கரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர் என்ற செய்தி மிகவும் வேதனையளிக்கிறது. பக்தர்களின் குடும்பங்களுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறோம்… பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்க எங்கள் காங்கிரஸ் தொண்டர்கள் கேட்டுக்கொள்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.

டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள பதிவில் மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த விபத்தில் உயிரிழந்த பக்தர்களின் ஆன்மா சாந்தியடைய நான் பிரார்த்திக்கிறேன். இந்த மகத்தான துக்கத்தைத் தாங்கும் வலிமையை அவர்களின் குடும்பங்களுக்கு கடவுள் வழங்கட்டும். அனைத்து பக்தர்களுக்கும் ஒரு பணிவான வேண்டுகோள் என்னவென்றால், பொறுமையைக் கடைப்பிடிக்கவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். நிர்வாகத்தின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி ஒருவருக்கொருவர் பாதுகாப்பைக் கவனித்துக் கொள்ளுங்கள்.” என தெரிவித்துள்ளார்.