டெல்லி: கொரோனாவை எதிர்கொள்ளவும், தடுப்பூசி பணிகளை விரைவுபடுத்துவது குறித்தும் பிரதமர் மோடிக்கு 5 யோசனைகளை தெரிவித்து, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் எழுதி உள்ளார்.
பிரதமர் மோடிக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் எழுதியுள்ள கடிதத்தின் விவரம் வருமாறு: கொரோனா தொற்றால், இந்தியாவும் உலக நாடுகளும் ஓராண்டாக தத்தளித்து வருகின்றன. வெவ்வேறு நகரங்களில் இருக்கும் தங்களது குழந்தைகளை பெற்றோர்கள் பார்க்க முடியவில்லை. தாத்தா, பாட்டிகளை அவர்களது பேரன், பேத்திகள் பார்க்கவில்லை. மாணவர்களை வகுப்பறைகளில் ஆசிரியர்கள் பார்க்கவில்லை. பெரும்பாலானோர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். லட்சக்கணக்கானோர் வறுமையில் தள்ளப்பட்டு உள்ளனர்.
தற்போது கொரோனா 2வது அலை வீச துவங்கும் நிலையில், பெரும்பாலான மக்கள், எப்போது தங்களது வாழ்வாதாரம் இயல்பு நிலைக்கு திரும்பும் என எதிர்பார்த்து உள்ளனர். பெருந்தோற்றை, எதிர்கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளன. அதில், தடுப்பூசி போடுவது முக்கியமானது. இது தொடர்பாக எனது ஆலோசனை வழங்கி உள்ளேன்.
அதன்படி 5 யோசனைகள் விவரம் வருமாறு:
- அடுத்த 6 மாதங்களில், தடுப்பு மருந்து உற்பத்திக்காக அனுமதி தரப்பட்டு உள்ளட நிறுவனங்கள், விநியோகிக்க உரிமம் பெற்ற நிறுவனங்கள் பற்றிய விவரங்களை மத்திய அரசு அறிவிக்க வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்குள் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயம் செய்தால், அதற்கு முன்னதாக தேவையான அளவு தடுப்பு மருந்து கொள்முதல் செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அப்போது தான், குறிப்பிட்ட காலகெடுவுக்குள் மருந்துகளை வழங்க உற்பத்தியாளர்கள் ஒப்பு கொள்வார்கள்.
- தடுப்பு மருந்துகளை அனைத்து மாநிலங்களுக்கும் வினியோகிப்பது தொடர்பாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். அவசர காலத்தில் வினியோகம் செய்வதற்கு 10 சதவீத மருந்துகளை மத்திய அரசு தன் வசம் வைத்திருக்க வேண்டும். மற்றவற்றை, மாநில அரசுகள் பயன்படுத்தி கொள்ள தெளிவான வெளியிட வேண்டும்
- முன்கள பணியாளர்களுக்கு யார் என்பதை வரையறுக்கவும். அவர்கள் 45 வயதுக்கு கீழ் இருந்தாலும் தடுப்பூசி போடுவதற்கும் மாநில அரசுகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும். உதாரணமாக பள்ளி ஆசிரியர்கள், பஸ் மற்றும் மூன்று சக்கர மற்றும் டாக்சி டிரைவர்கள், நகராட்சி மற்றும் பஞ்சாயத்து ஊழியர்கள் மற்றும் வழக்கறிஞர்களை மாநில அரசுகள் முன்கள பணியாளர்களாக அறிவிக்க அனுமதி வழங்கலாம். அவர்கள் 45 வயதுக்கு கீழ் இருந்தாலும் தடுப்பூசி போட அனுமதி வழங்கலாம்.
- கடந்த பல ஆண்டுகளாக, உலகளவில் மிகப்பெரிய தடுப்பு மருந்து உற்பத்தியாளராக இந்தியா திகழ்ந்தது. இதற்கு அரசின் கொள்கையும், பாதுகாக்கப்பட்ட அறிவுசார்சொத்துரிமையுமே காரணம். தனியார் நிறுவனங்களின் பங்களிப்பும் அதிகம். சுகாதார அவசர நிலை ஏற்பட்டுள்ள நிலையில், தடுப்பு மருந்து உற்பத்தி நிறுவனங்கள், உற்பத்தியை விரைவாக அதிகரிக்க தேவையான நிதி மற்றும் சலுகைகளை மத்திய அரசு விரைவாக வழங்க வேண்டும்.
மேலும், சட்டத்தில் உள்ள கட்டாய லைசென்ஸ் முறையை அமல்படுத்த வேண்டும். இதன் மூலம், ஒரு லைசென்ஸ் மூலம், தடுப்பு மருந்தை ஏராளமான நிறுவனங்கள் உற்பத்தி செய்ய முடியும். இது போன்ற முறை எச்ஐவி எய்ட்ஸ் நோய் பரவிய நேரத்தில் கடைபிடிக்கப்பட்டது. கொரோனா கவலைக்கு உரியதாக உள்ள நிலையில், கட்டாய லைசென்ஸ் முறையை இஸ்ரேல் அமல்படுத்தி உள்ளது. இந்தியாவில், அதிகம் பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளதால், இந்த திட்டத்தை இந்தியா விரைவாக கடைபிடிக்க வேண்டும்.
- உள்நாட்டு மருந்து குறைவாக உள்ளதால், ஐரோப்பிய மருத்துவ அமைப்பு அல்லது அமெரிக்க மருத்துவ அமைப்பு ஒப்புதல் வழங்கிய மருந்துகளை, நமது நாட்டில் எந்தவித தடையும் இல்லாமல் இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும். நாம், கணிக்க முடியாத அவசர நிலையை எதிர்கொண்டு வருகிறோம். அவசர காலத்தில் இதனை செய்ய நிபுணர்கள் ஏற்று கொள்வார்கள். இந்த தளர்வானது குறிப்பிட்ட காலத்திற்கு வழங்கலாம்.
கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் தடுப்பூசிகளை அதிகரிப்பது முக்கியம். தற்போது, இந்தியாவில் குறைந்தளவினருக்கே தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. சரியான கொள்கை திட்டமிடலுடன், சிறப்பாகவும் விரைவாகவும் நம்மால் செயல்பட முடியும் என நம்புகிறேன். இந்த ஆலோசனைகளை மத்திய அரசு ஏற்று கொள்ளும் என்றும், அதற்கு ஏற்றவாறு செயல்படும் எனவும் நம்புகிறேன் என்று அந்த கடிதத்தில் மன்மோகன் சிங் கூறி உள்ளார்.