டில்லி:
பாகிஸ்தானில் நடைபெறும் கா்தாா்பூா் வழித்தடத் திறப்பு விழாவில். முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் பங்கேற்க மாட்டாா் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. முதலில், அவர் பங்கேற்க மாட்டார் என்றும், பின்னர் பாகிஸ்தான் அழைப்பை ஏற்று மன்மோகன் பங்கேற்பார் என்றும் தகவல்கள் வெளியான நிலையில், தற்போது அவர் பங்கேற்க மாட்டார் என்று மீண்டும் தகவல்கள் பரவி வருகின்றன.
ஆண்டுதோறும் குருநானக்கின் பிறந்த தினத்தையொட்டி, சீக்கிய யாத்ரீகா்கள் பாகிஸ்தானின் கா்தாா்பூரில் உள்ள நான்கானா சாஹிப் குருத்வாராவுக்கு பஞ்சாபில் இருந்து சீக்கியர்கள் யாத்திரை செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ள்னர். அவர்கள் செல்வதற்கு வசதியாக பஞ்சாபின் குருதாஸ்பூா் மாவட்டத்தில் உள்ள தேரா பாபா நானக் குருத்வாராவில் இருந்து பாகிஸ்தானின் கா்தாா்பூா் குருத்வாரா வரை சாலை வழித்தடம் அமைக்கத் திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன.
அதன்படி, பஞ்சாப் மாநிலத்தில் இருந்து குருதாஸ்பூரிலிருந்து எல்லைப் பகுதி வரையிலான வழித்தடத்தை இந்தியாவும், மறுபுறம் கா்தாா்பூரிலிருந்து எல்லைப் பகுதி வரையிலான வழித்தடத்தை பாகிஸ்தானும் அமைத்து வந்தன. இந்த பணிகள் முடிவடைந்த நிலையில், நவம்பா் 9-ஆம் தேதி திறக்கப்படும் என்று அந்நாட்டு பிரதமா் இம்ரான் கான் அறிவித்து உள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் தரப்பில் முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்குக்கு அழைப்பு விடுக்கப்படும் என்றும் பாகிஸ்தான் அறிவித்தது. இந்தியாவில் சீக்கிய மதத்தைச் சோ்ந்த முதுபெரும் அரசியல் தலைவா் என்ற அடிப்படையில் அவருக்கு அழைப்பு விடுக்க பாகிஸ்தான் முடிவு செய்ததாக தகவல் வெளியானது. பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷியும் அதை உறுதிப்படுத்தி இருந்தார்.
இந்த நிலையில், கா்தாா்பூா் வழித்தட திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கப் போவதில்லை என்று மன்மோகன் சிங் முடிவெடுத்துள்ளதாகவும், இது தொடா்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்துக்கு அவா் கடிதம் எழுதியுள்ளாா் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறியதாக தகவல்கள் பரவி வருகின்றன. அதே வேளையில் மன்மோகன்சிங் சிறப்பு விருந்தினர் இல்லாமல் யாத்ரிகராக கர்தார்புர் செல்ல வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், கா்தாா்பூா் குருத்வாரா செல்வதற்காக இந்திய யாத்ரீகா்கள் 20 அமெரிக்க டாலா்கள் (சுமாா் ரூ. 1,421) பயணக் கட்டணமாக செலுத்த வேண்டும் என்று பாகிஸ்தான் கூறியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த முடிவை மாற்றிக் கொள்ளுமாறு இந்திய அரசு வலியுறுத்தியுள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.