இம்பால்: மணிப்பூர் மாநிலத்தின் பிரபல அடையாளமான கருப்பு அரிசிக்கு, புவிசார் குறியீடு(GI – Geographical Indication) கிடைத்துள்ளது.
இந்த அரிசி அந்த மாநில மக்களால் ‘சக்கோவா’ என்று அழைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
புவிசார் குறியீட்டுப் பதிவகம், தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில், இந்த கருப்பு அரிசிக்கு புவிசார் குறியீட்டு வழங்கப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளது.
கருப்பு அரிசிக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட வேண்டுமென்று, சக்கோவா உற்பத்தியாளர்களின் கூட்டமைப்பு விண்ணப்பம் செய்திருந்தது.
அந்த முயற்சிக்கு, வேளாண் அமைச்சகம், மணிப்பூர் மாநில அரசு மற்றும் வடகிழக்குப் பிராந்திய வேளாண் சந்தைப்படுத்தல் கழக நிறுமம் உள்ளிட்டவை ஆதரவு அளித்தன.
ஒரு குறிப்பிட்ட பகுதியில் விளையும் குறிப்பிட்ட சிறப்பு தன்மைகள் கொண்ட விளைபொருட்கள் மற்றும் உற்பத்திப் பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது. இந்தக் குறியீடு கிடைக்கப் பெறுவதால், அந்தப் பொருட்களுக்கான வணிக வாய்ப்புகள் விரிவடைவதுடன், பல பாரம்பரியத் திறன்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் வாய்ப்பு ஏற்படுகிறது.

கருப்பு அரிசிக்கு புவிசார் குறியீடு கிடைக்கப்பெற்றதன் மூலம், அந்த அரிசி மற்றும் அதன் விதைகளை உலகின் எந்தப் பகுதிக்கும் தடையின்றி, தனி அடையாளத்துடன் விற்பனை செய்ய முடியும் மற்றும் வேறு யாரேனும் அந்த அரிசியை வர்த்தகம் செய்ய விரும்பினாலும், உற்பத்தியாளர்கள் அதற்கான லாயல்டியைப் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில நூற்றாண்டுகளாக இந்த கருப்பு அரிசி மணிப்பூர் பகுதியில் பயிரிடப்பட்டு வருகிறது. இந்த அரிசி சமூகக் கூடுகை விருந்துகளின்போது, சக்கோவா கஞ்சியாக பரிமாறப்படுகிறது.