மணிப்பூரில் பிப்ரவரி 13 அன்று மத்திய அரசு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தியது. மே 2023 முதல் மாநிலத்தில் மெய்தி மற்றும் குகி-ஜோ குழுக்களுக்கு இடையேயான இன வன்முறையில் 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர்.

மாநில சட்டமன்றத்தின் பதவிக்காலம் 2027 வரை உள்ள நிலையில் முதலமைச்சர் என். பிரேன் சிங் ராஜினாமா செய்ததை அடுத்து ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டதுடன் சட்டமன்றம் முடக்கப்பட்டது.

இந்த நிலையில் மீண்டும் ஆட்சி அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மொத்தம் 60 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட மணிப்பூர் சட்டமன்றத்தில் பாஜக-வுக்கு 37 உறுப்பினர்கள் உள்ளனர்.

அதில் பாஜக-வைச் சேர்ந்த 8 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தேசிய மக்கள் கட்சியைச் சேர்ந்த ஒருவர் மற்றும் ஒரு சுயேச்சை உறுப்பினர் என மொத்தம் 10 எம்.எல்.ஏ.க்கள் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளனர்.

இந்த எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ராஜ் பவன் சென்றுள்ள நிலையில் ஆட்சி அமைப்பது குறித்து ஆளுநர் அஜய் குமார் பல்லாவை சந்தித்து உரிமை கோரியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து SAPAAM-இன் சுயேச்சை MLA நிஷிகாந்த் சிங் கூறுகையில், ‘விரைவில் அரசாங்கம் அமைக்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்.’ எங்களுக்கு ஒரு பிரபலமான அரசாங்கம் வேண்டும் என்று ஆளுநரிடம் வேண்டுகோள் விடுக்கிறோம். நாங்கள் அனைவரும் கையெழுத்திட்ட ஒரு ஆவணத்தையும் ஆளுநரிடம் கொடுத்துள்ளோம்.

மணிப்பூரில் உள்ள அனைத்து தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்எல்ஏக்களும் ஒரு பிரபலமான அரசாங்கத்தை அமைக்க மிகவும் ஆர்வமாக உள்ளனர். பொதுமக்களின் ஆதரவையும் நாங்கள் விரும்புகிறோம். நாங்கள் கொடுத்த கடிதத்தில் சுமார் 22 பேரின் கையொப்பங்கள் உள்ளன. ஆளுநரைச் சந்திக்க 10 எம்.எல்.ஏக்கள் இங்கு வந்துள்ளனர் என்று கூறினார்.