இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் நடந்து வரும் வன்முறை மோதல்களுக்கு அம்மாநில முதல்வர் என் பிரேன் சிங் வருத்தம் தெரிவித்து, மக்களிடம் மன்னிப்பு கேட்டார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக இரு தரப்பினரிடையே மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. இந்த மோதல் காரணமாக இதுவரை 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர். கடந்த நவம்பரில் மணிப்பூரில் உள்ள ஜிரிபாமில் மூன்று பெண்கள் மற்றும் அவர்களது மூன்று குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டதையடுத்தும் அங்கு பரபரப்பு நிலவி வந்தது. தொடர் வன்முறையால், முதல்வர் பிரேன் சிங் தலைமையிலான பாஜக அரசுக்கு சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன. மேலும், பிரதமர் மோடி அங்கு சென்று மக்களை சந்திக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், பிரதமர் இதுவரை மணிப்பூர் செல்லாத நிலையில், ராகுல்காந்தி உள்பட எதிர்க்கட்சி தலைவர்கள் அங்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
இந்த நிலையில், மாநிலத்தில் தொடரும் வன்முறை சம்பவங்களுக்காக அம்மாநில பாஜக முதல்வர் பைரேன்சிங் பொதுமக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார்.
புத்தாண்டில் அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்காக பாடுபடுவோம். கடந்த கால தவறுகளை மறந்து ஒற்றுமையாக வாழ அனைத்து சமூக மக்களும் உறுதியேற்போம். 2025ம் ஆண்டில் அமைதி திரும்பும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதல்வர் பிரேன் சிங், ” மணிப்பூரில் மே 3, 2023 அன்று மெய்தேய் மற்றும் குக்கி சமூகங்களுக்கு இடையே வெடித்த இனக்கலவரத்தின்போது, கொடூர கொலைகள், பாலியல் வன்கொடுமைகள், வீடுகள் மற்றும் உடைமைகள் அழிப்பு என பேரதிர்ச்சி நிகழ்வுகளும் நடந்தன.
இந்த வன்முறை காரணமாக மாநிலத்தில் இதுவரை 200 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 12,247 எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். குற்றம் சாட்டப்பட்ட 625 பேர் கைது செய்யப்பட்டனர். சுமார் 5,600 ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் உட்பட ஆயுதங்கள், சுமார் 35,000 வெடிமருந்துகள் மீட்கப்பட்டன.
இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு உதவ மத்திய அரசு போதிய பாதுகாப்புப் பணியாளர்களையும் போதுமான நிதியையும் வழங்கியுள்ளது. மேலும், இடம்பெயர்ந்தவர்களுக்கு புதிய வீடுகளை கட்டுவதற்கு போதுமான நிதி உள்ளது. இந்த ஆண்டு முழுவதும் மிகவும் துரதிர்ஷ்டவசமானது.
கடந்த மே 3 முதல் இன்று வரை என்ன நடக்கிறது என்பதற்காக மாநில மக்களிடம் நான் வருந்துகிறேன். பலர் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்துள்ளனர். பலர் வீடுகளை விட்டு வெளியேறினர். நான் வருத்தப்படுகிறேன். நான் மன்னிப்பு கேட்கிறேன். ஆனால் இப்போது, கடந்த மூன்று முதல் நான்கு மாதங்களாக அமைதியை நோக்கி முன்னேறி வருவதைக் கண்டு, 2025ஆம் ஆண்டுக்குள் மாநிலத்தில் இயல்பு நிலை திரும்பும் என நம்புகிறேன்” என்று வருத்தும் தெரிவித்தார்.