இம்பால்: பறவை காய்ச்சல் எதிரொலியாக மற்ற மாநிலங்களின் பறவைகளை கொண்டு வர மணிப்பூர் அரசு தடை விதித்துள்ளது.

பறவை காய்ச்சல் கேரளாவில் அதிக அளவில் கண்டறியப்பட்டதை அடுத்து, கர்நாடகா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், இமாச்சல பிரதேசம், அரியானா, குஜராத் மற்றும் உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது.

அதனால் நீர்நிலைகள், உயிரியல் பூங்காக்கள், கோழிப் பண்ணைகள், இறந்த பறவைகளை அடக்கம் செய்யும் பகுதி உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

டெல்லி, இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களை தொடர்ந்து மணிப்பூர் அரசும் வெளி மாநிலங்களிலிருந்து பறவைகளை கொண்டு வர தடை விதித்துள்ளது. மேலும் இறைச்சி இறக்குமதிக்கும் தடை செய்யப்பட்டுள்ளது.

பறவை காய்ச்சலிலிருந்து தற்காத்துக்கொள்ளும் முயற்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்,  மறு உத்தரவு வரும் வரை தடை அமலில் இருக்கும் என்று மாநில அரசு தெரிவித்து உள்ளது.