கோவை: மங்களூர் குண்டு வெடிப்பு குற்றவாளி ஷாரிக் கோவையில் தங்கிய லாட்ஜில் தனிப்படை போலீசார் அதிரடி ரெய்டு நடத்தினர்.  கோவை கார் வெடிப்பிலும், மங்களூர் ஆட்டோ குக்கர் குண்டுவெடிப்புக்கும் சம்பந்தம் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

கர்நாடக மாநிலம் மங்களூரில் ஆட்டோவில் வெடிகுண்டு வெடித்து, அதில் பயணம் செய்த முகமது ஷாரிக் (24) மற்றும் டிரைவர் படுகாயமடைந்தனர். படுகாயம் அடைந்த முகமது ஷாரிக் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது வீட்டில் நடத்திய சோதனையில், அவர்  பயன்படுத்திய சிம்கார்டு கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சிம்கார்டு, அவர் கோவையில் வாங்கியது  தெரிய வந்தது. அவரது பெயர் இல்லாமல், ஊட்டியை சேர்ந்த சுரேந்திரன் (28) என்பவரின் பெயரில் அந்த சிம்கார்டு பெறப்பட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து ஊட்டி போலீசார் சுரேந்திரனிடம் விசாரணை நடத்தினர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதில், பக்கத்து அறையில் இருந்த ஷாரிக் கேட்டுக்கொண்டதற்கு இணங்க தனது ஆதார் கார்டை வைத்து சிம் கார்டு வாங்கிக் கொடுத்ததாக ஒப்புக்கொண்டு உள்ளது. சுரேந்திரன்  கோவையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் விளையாட்டு பாயிற்சியாளராக இருந்ததும், லாட்ஜில் தங்கி இருந்தபோது பக்கத்து அறையில் தங்கியிருந்த முகமது ஷாரிக்கிடம், பழக்கம் ஏற்பட்ட நிலையில், முகமது ஷாரிக் சிம்கார்டு வாங்க உதவி கேட்டார். அதன்படி அவர் தனது ஆதார் கார்டை தந்து சிம்கார்டு வாங்க உதவியுள்ளதும் தெரிய வந்துள்ளது. மேலும் சுரேந்திரன் செல்போனில் முகமது ஷாரிக் யார் யாரிடம் பேசினார்? என்ற விவரங்களும் சேகரிக்கப்பட்டு வருகிறது.  இதையடுத்து சுரேந்திரனை மங்களூருக்கு  விசாரணைக்காக போலீசார் அழைத்து சென்றுள்ளனர்.

பின்னர் ஷாரிக்  கோவையில் இருந்து மதுரை சென்று விட்டார். அங்கே ஒரு நாளும், நாகர்கோவிலில் 2 நாளும் தங்கியுள்ளார். அவர் தமிழகத்தில் தங்கி இருந்தபோது யாரெல்லாம் சந்தித்தார்?, என்ன சதி திட்டம் தீட்டப்பட்டது?, இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்? என கோவை போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் கோவை காந்திபுரத்தில் ஷாரிக் தங்கியிருந்த லாட்ஜ், 3 தளங்களில் செயல்படுகிறது. அந்த லாட்ஜில் கோவை, ஊட்டி மற்றும் மங்களூர் போலீசார் சோதனை நடத்தினர். குறிப்பாக செப்டம்பர் மாதம் முகமது ஷாரிக் தங்கிய அறையில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். மேலும் பதிவேடுகள் குறித்த ஆதாரங்களையும் சேகரித்தனர். சட்ட விரோத செயல்பாடுகள் இருந்ததா? எனவும் விசாரித்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் லாட்ஜை உடனடியாக மூடினர்.

சுரேந்திரனிடம் நடத்திய விசாரணையில், ‘‘முகமது ஷாரிக் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. என் குடும்பத்தை பிரிந்து தனியாக இருக்கிறேன், வேலை தேடி வருவதாக கூறியதுடன்,   செல்போன்கூட என்னிடம் கிடையாது என கெஞ்சினார். அதனால்தான் நான் அவருக்கு  ஹஎனது ஆதார் கார்டு நகல் கொடுத்து சிம்கார்டு பெற உதவி செய்தேன். அதற்கு பின் எனக்கு எதுவும் தெரியாது. அவர் இவ்வளவு பெரிய குற்றவாளி என எனக்கு தெரியாது என்று கூறியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் கோவை கார் குண்டு வெடிப்புக்கும் ஷாரிக்குக்கும் தொடர்பு உள்ளதா?   கோவைக்கு எதற்கு வந்தார்?, இவர் உயிரிழந்த ஜமேஷா முபினை சந்தித்தாரா, யாருடன் எல்லாம் பேசினார், எங்கெல்லாம் சென்றார் என்பத குறித்தும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இது கோவையில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகா ஆட்டோ குண்டு வெடித்த சம்பவத்தில் சிக்கிய நபருக்கு கோவை கார் குண்டு வெடிப்பிலும் தொடர்பா? பரபரப்பு தகவல்கள்…