டெல்லியில் உள்ள லீலா பேலஸ் ஐந்து நட்சத்திர விடுதியில் 2022 ம் ஆண்டு ஆகஸ்ட் 1 முதல் நவம்பர் 20 வரை சுமார் நான்கு மாதம் தங்கியிருந்த நபர் அதற்கான கட்டணத்தை செலுத்தாமல் டிமிக்கி கொடுத்த சம்பவம் விடுதி உரிமையாளர்களிடேயே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான அபுதாபி அரச குடும்ப ஊழியர் என கூறிக் கொண்டு முகமத் ஷெரீப் என்ற நபர் ஆகஸ்ட் மாதம் இந்த விடுதியில் தங்கி இருக்கிறார்.
வேலை நிமித்தமாக டெல்லி வந்துள்ளதாக கூறிய அவர் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் சிறு தொகையை முன்பணமாக கொடுத்திருக்கிறார்.
பின்னர் நவம்பர் மாதம் 20 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கிய அவர் அந்த விடுதியில் இருந்து யாருக்கும் தெரியாமல் காலி செய்து வெளியேறி இருக்கிறார்.
அவர் கொடுத்த காசோலையை வங்கியில் செலுத்தியபோது பணமில்லை என்று திரும்பி வந்துள்ளது.
இதனை அடுத்து அந்த நபரை தொடர்புகொள்ள முயற்சித்த போது அவர் அந்த விடுதியில் இருந்து வெளியேறிய சம்பவம் தெரியவந்துள்ளது.
மேலும், அவர் அந்த ஹோட்டலுக்கு சொந்தமான வெள்ளி மற்றும் விலையுயர்ந்த பொருட்களை திருடிச் சென்றதும் தெரியவந்தது.
இதுகுறித்து காவல் துறையில் புகார் அளித்த விடுதி நிர்வாகம் அவர் கொடுத்த விசிட்டிங் கார்டை போலீசாரிடம் காண்பித்தனர், இதில் அந்த விசிட்டிங் கார்ட் அபுதாபி அரச குடும்பத்தின் பெயரில் போலியாக அச்சிடப்பட்டது என்பது தெரியவந்துள்ளது.
தொடர்ந்து பல்வேறு விடுதிகளில் இது போன்ற மோசடி சம்பவத்தில் ஈடுபட்டவர்களின் விவரங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வரும் காவல்துறையினர் அவர் யார் எங்கிருந்து வந்தார் எப்படி மாயமானார் என்ற விவரம் ஏதுமின்றி திணறி வருகின்றனர்.
அதேவேளையில், டெல்லியில் உள்ள ஐந்து நட்சத்திர விடுதியில் ரூ. 23.46 லட்சம் வரை வாடகை பாக்கி வைத்து சென்றுள்ள விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.