காதலி வேண்டுமா அல்லது நான் வேண்டுமா என்று மனைவி நிபந்தனை விதித்ததை அடுத்து காதலியை கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரின் ஃபலாசியா காவல் நிலையப் பகுதியில் உள்ள காட்டில் கடந்த மாதம் ஒரு பெண் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை தொடர்பாக விசாரித்து வந்த காவல்துறையினர் 39 நாட்களுக்குப் பிறகு இதில் தொடர்புடைய தேவிலால் என்ற நபரை கைது செய்துள்ளனர்.
செமரி மாவட்டம், தங்கவாடா காவல் நிலையத்தில் வசிக்கும் மஞ்சியின் மகன் தேவி லால், ஏற்கனவே திருமணமாகி மூன்று குழந்தைகளுக்கு தந்தையானவர். இவர் சில ஆண்டுகளுக்கு முன் அகமதாபாத்தில் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்துள்ளார்.
அப்போது அவருக்கு ஏற்கனவே திருமணமாகி 4 வயது குழந்தைக்குத் தாயான சீதாதேவி என்ற பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது, இந்த நிலையில் சீதாதேவியின் கணவர் அவரை விட்டு பிரிந்து சென்றதை அடுத்து தேவிலால், சீதாதேவியுடன் குடும்பம் நடத்தினார் இதில் அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்துள்ளது.
சீதாதேவியின் 4 வயது மகன் தன்னுடன் இருப்பதை விரும்பாத தேவிலால் அந்த குழந்தையைக் கொன்று யாருக்கும் தெரியாமல் புதைத்துள்ளார்.
இதுதொடர்பாக யாரிடமும் கூறவேண்டாம் என்றும் சீதாதேவியை தேவிலால் நிர்பந்தித்துள்ளார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து ஓராண்டாக சீதாதேவியுடன் குடும்பம் நடத்தி வந்த தேவிலாலுக்கு திடீரென அவரது மனைவி மூலம் சிக்கல் ஏற்பட்டது.
4 வயது குழந்தை கொல்லப்பட்ட விவகாரத்தை அறிந்த தேவிலாலின் மனைவி தான் இதைப் பற்றி வெளியில் சொல்லாமல் இருக்கவேண்டும் என்றால் சீதாதேவியை விட்டுவிட்டு தன்னுடன் குடும்பம் நடத்தவேண்டும் என்று கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த தேவிலால், உறவினர் வீட்டிற்கு செல்லலாம் என்று கூறி சீதாதேவியை அழைத்துச் செல்லும் வழியில் காட்டிற்குள் அழைத்துச் சென்று கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்து பிணத்தை காட்டுக்குள் வீசியதாக காவல்துறை விசாரணையில் ஒப்புக் கொண்டார்.
மனைவிக்காக கள்ளக் காதலியைக் கொன்றதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.